ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பல்வேறு கேலி பிரசாரங்கள் மற்றும் தவறான தகவல்கள் பரிமாறப்படுவது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு, இந்தப் பிரசாரத்துடன் தொடர்புடைய யூடியூப் தளங்கள் மற்றும் சமூக ஊடக வலைத்தளங்களை கண்காணித்து வருகின்றது.
இந்த அவதூறு பிரசாரங்களை உருவாக்க பல அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க ஆதரவாளர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவதூறு பிரசாரங்கள்
எனவே, இவ்வாறு அவதூறு பரப்பும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் அதிகாரப்பூர்வ முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான பொய்யான பிரசாரத்தால் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் அமைச்சர்களின் நற்பெயருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்த தயாராக உள்ளது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி அநுர ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதும் அவரின் புகைப்படங்களில் உருவ மாற்றம் செய்யப்பட்டு கேலி செய்யும் வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
