நாட்டில் யார் ஆட்சியாளராக வந்தாலும் தமிழ் மக்களின் விடயத்தில் ஒரே
நிலைப்பாட்டில் தான் தமது பொறிமுறைகளை முன்னகர்த்துகின்றனர் என வடக்கு
கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிதா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நடந்த ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கு கிழக்கில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவுகளாகிய நாம் சர்வதேச நீதி கோரி தொடர்ச்சியாக போராடி வருகின்றோம். ஆயுத
மெளனிப்புடன் 2009ஆம் ஆண்டு யுத்தமானது மிகப் பெரும் இனவழிப்பின் ஊடாக
முடிவுறுத்தப்பட்டது.
சர்வதேச நீதி விசாரணை
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு முன்னரும் அதன் பின்னரும் சிறுவர்கள். பெண்கள்
உட்பட பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் இளவழிப்பும், செம்மணி மனிதபுதைகுழி உட்பட பல மனித
புதைக்குழிகளும், சித்திரவதை முகாம்கள் ஆகியவை இனப்படுகொலைக்கான முக்கிய
ஆதாரங்களாக எம் கண் முன் நிலைத்து நிற்கின்றது.
இவை அனைத்தும் சர்வதேச விசாரணை
ஒன்றின் கீழ் முறையாக விரைந்து விசாரிக்கப்பட வேண்டும்.
சர்வதேச நீதி விசாரணை காலதாமதமின்றி நடத்தப்பட வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் பெற வேண்டிய உண்மையான
நீதியும், அவர்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் சர்வதேச சமூகத்தின்
செயற்பாடுகள் இன்றியமையாதவையாகும்” எனக் கூறியுள்ளார்.
