சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து வந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களைத் தாக்கியதற்காக 28 வயது சவுதி நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (26) காலை 6:32 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்த UL-266 விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மலேசியாவுக்குச் சென்று கொண்டிருந்த பயணி, விமானம் தரையிறங்கத் தயாராகும் போது கழிப்பறைக்குச் செல்ல முயன்றதால் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணை
விமானம் தரையிறங்கத் தயாராகும் போது அனைத்து பயணிகளும் தங்கள் ஆசனப்பட்டிகள் அணிந்து இருக்க வேண்டும்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விமானப் பணிப்பெண்கள் விமானிக்குத் தகவல் தெரிவித்ததும், விமான நிலைய காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு, விமானம் தரையிறங்கியதும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை, கட்டுநாயக்க விமான நிலைய சுற்றுலா காவல்துறையுடன் இணைந்து
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் இலங்கை வான்வெளியில் நடந்ததால், சந்தேகநபரான சவூதி நாட்டவர் நாளை (27) கொழும்பு நீதவான் நீதிமன்றம் எண். 01 இல் முற்படுத்தப்படவுள்ளார்.
