சுகயீன விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய ரீதியில் ஆசிரியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இரண்டாம் தவணை ஆரம்பமான நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையானது மாணவர்களின் கல்வி நிலைக்கு பின்னடைவாக அமையும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (26) ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பு
மேலும், ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக குழந்தைகளின் வரவு விகிதம் குறைவாக காணப்படுவதாக கூறப்படுகிறது.
அத்தோடு, பாடசாலைக்கு வருகைத்தந்துள்ள மாணவர்களும், விளையாட்டு மைதானங்களிலேயே விளையாடி வருவதாக கூறப்படுகிறது.
மலையக பாடசாலைகள்
அதேவேளை, இந்த தொழிற்சங்க போராட்டம் காரணமாக நுவரெலியா மாட்டத்தில் உள்ள பிரதான
பாடசாலைகள் உட்பட அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியரகளும் மாணவர்களும் வருகை தரவில்லை இதனால்
பாடசாலைகளின் படலைகள் மூடப்பட்டு இருந்தன.
ஒரு சில பாடசாலைக்களுக்கு மாணவர்கள் வருகை தந்து ஏமாற்றத்துடன் திரும்பி
செல்வதனை காணக்கூடியதாக இருந்தன.
நகரங்களில் உள்ள பிரதான பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் இன்று வருகை தராமையினால்
பெற்றோர்கள் வந்து தமது பிள்ளைகளை அழைத்து செல்வதனை காணக்கூடியதாக இருந்தது.
செய்தி: சுந்தரலிங்கம்
நானுஓயா
மேலும், நானுஓயா பகுதிகளில் அதிபர்கள், ஆசிரியர்கள்,ஆசிரிய
ஆலோசகர்கள் சுகயீன விடுமுறை காரணமாக கல்வி செயற்பாடுகள்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெற்றோரும் மாணவர்களும் பெரும் சிரமங்களை
எதிர்கொண்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை பொருட்படுத்தாது ஒரு சில
மாணவர்கள் பாடசாலைகளுக்கு சென்ற போதிலும் அதிபர் ஆசிரியர்கள் வருகை இன்றி
மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை காணப்பட்டது.
இதேவேளை, சில பாடசாலைகள் இன்று திறக்கப்பட்ட போதிலும் கற்றல் செயற்பாடுகள்
இடம்பெறவில்லை. குறைந்தளவான மாணவர்களே வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நுவரெலியாவில் பாடசாலைகள் பலவற்றின் முன் வாயிற்கதவு
திறக்கபட்டிருந்த போதிலும் வகுப்பறைகள் பூட்டப்பட்டு இருந்ததை காணக்கூடியதாக
இருந்தது.
செய்தி: திவாகரன்
கிளிநொச்சி
26.06.2024 அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சுகயீன
விடுமுறை போராட்டத்தில் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
முடங்கியுள்ளன
அத்துடன், மாணவர்கள் வரவும் மிக குறைவாக காணப்பட்டதுடன்
பாடசாலைகளுக்கான அதிபர்கள் ஆசிரியர்கள் வரவின்மை காணப்பட்டதால் மாணவர்கள்
வீடுகளுக்கு திரும்ப செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.
செய்தி: காந்தீபன்
மட்டக்களப்பு
இன்றைய தினம் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களின்
வரவு குறைவானதாகவேயிருந்ததை காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் பாடசாலைக்கு மாணவர்களின் வருகை குறைவான நிலையிலேயே இருந்ததுடன்
பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பிச்சென்றதை
காணமுடிந்ததுள்ளதாக கூறப்படுகிறது.
செய்தி – குமார்
ஏறாவூர்
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை , ஏறாவூர் அல்முனிரா பாலிகா மஹாவித்தியாலயம், ஏறாவூர் அறபா வித்தியாலயம், ஏறாவூர் ரகுமானியா மஹாவித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் வருகை மிகக்குறைவாக காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
செய்தி – நிலவன்