Home இலங்கை கல்வி புலமைப்பரிசில் பரீட்சை! மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான அவசர அறிவுறுத்தல்

புலமைப்பரிசில் பரீட்சை! மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான அவசர அறிவுறுத்தல்

0

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில் பெற்றோர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

மேலதிக வகுப்புகளை நடத்தும் காலம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் உள்ள 2723 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09.08.2026) நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 294089 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் சிங்கள மொழியில் 220366 விண்ணப்பதாரர்களும், தமிழ் மொழியில் 73723 விண்ணப்பதாரர்களும் பதிவு செய்துள்ளனர்.

இப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் காலம் ஆகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் வாயிலாக புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பரப் பணிகளை மேற்கொள்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. மாணவர்களின் மன ஒருமைப்பாட்டைப் பேணி, கவனத்துடன் பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்குத் தொடங்கி காலை 10.45 மணிக்கு நிறைவடையும்.

அறிவுறுத்தல்

அதன்பின் கிடைக்கும் சிறிய இடைவேளைக்குப் பிறகு, காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை ஒரு மணி நேர காலம் முதல் வினாத்தாளுக்காக ஒதுக்கப்படும்.

பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசித்து, தங்களது பரீட்சை இலக்கத்தை சரியாக குறிப்பிட்டு, தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே பதிலளிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் எதையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Source: https://tamilwin.com/article/scolarship-exam-in-sri-lanka-1786162126

NO COMMENTS

Exit mobile version