Home இலங்கை சமூகம் இனவழிப்பின் அடையாளமாக மாறியுள்ள செம்மணியும் தமிழ் மக்களின் நீதிக்கான ஏக்கமும்…

இனவழிப்பின் அடையாளமாக மாறியுள்ள செம்மணியும் தமிழ் மக்களின் நீதிக்கான ஏக்கமும்…

0

அநுர அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறி ஒரு வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில்
தென்னிலங்கையில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் கைதுகள்,
பாதாள உலக குழுத் தலைவர்களின் கைதுகள் என்பன சூடு பிடித்து தெற்கு அரசியலில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகப்
பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, செம்மணி சித்துப்பாத்தி மனித
புதைகுழிக்கான நீதி, தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம், மன்னார் காற்றாலை
மற்றும் கனிய மணல் அகழ்வு என்பன பெரும் பேசுபொருளாக மாறியிருக்கின்றது.

இதில்
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி விவகாரம் சர்வதேசத்தினதும் கவனத்தையும்
ஈர்த்துள்ளது.

இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தம் மற்றும் கிளர்ச்சி காரணமாக நாட்டின் பல
பகுதிகளிலும் மனிதப் புதைகுழிகள் தோற்றம் பெற்றுள்ளன.

இதுவரை சுமார் 23
இற்க்கு மேற்பட்ட மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்படாமல் இன்னும் பல மனிதப் புதைகுழிகள் இலங்கைத் தீவு முழுவதும்
காணப்படுகின்றன.

 மனித புதைகுழிகள்

இந்த நாட்டைப் பொறுத்தவரை தென்னிலங்கையில் ஜேவிபி
கிளர்ச்சியுடன் ஆரம்பிக்கப்பட்ட மனித புதைகுழிகள், 2009 மே 18 விடுதலைப்
புலிகளுடனான யுத்தம் நிறைவுக்கு வரும் வரையில் தொடர்ந்தன.

தென்னிலங்கையில்
கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் அனைத்தும் தற்போது தேசிய மக்கள் சக்தி
என்னும் புதிய முகமூடியுடன் முதன் முதலாக ஆட்சிப் பீடமேறிய ஜேபிவி
கிளர்ச்சியின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களது என கருதப்படுகின்றது.

அவ்வாறே வடக்கு – கிழக்கில் காணப்படுகின்ற மனித புதைகுழிகள் அனைத்தும்
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களுடையது
என கருதப்படுகின்றது.

அந்த வகையில் தென்னிலங்கையில் பட்டலந்த வதை முகாம்
தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கவனத்தைப் பெற்றுள்ளதுடன், அது
தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.

பட்டலந்த வதை முகாமில் ஜேவிபி தோழர்களே அதிகம் சித்திரவதைக்கு
உள்ளாக்கப்பட்டனர். அதனால் அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றது.

செம்மணி சித்துபாத்தி மயானத்தில் மேற்கொள்ள்பட்டு வரும் அகழ்வுகளில் இதுவரை
200 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
அரவணைத்த நிலையிலும், ஒன்றாக புதைக்கப்பட்ட நிலையிலும் எலும்புக் கூடுகள்
மீட்கப்பட்டுள்ளன.

பெரியவர் முதல் பால்குடி குழந்தை வரை கொல்லப்பட்டமையை அங்கு
மீட்கப்பட்ட எலுப்புக் கூடுகளும் சான்றுப் பொருட்களும் வெளிப்படுத்தி
நிற்கின்றது.

1998 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் செம்மணியில்
அப்போது 15 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அந்த அகழ்வு
தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவில்லை. அந்த அகழ்வு பணிகள் நிறைவுக்கு வராத
நிலையில் இடைநடுவில் நிறுத்தப்பட்டது.

1995, 1996 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தால்
மீட்கப்பட்ட யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து காணாமல் போன நூற்றுக்கணக்கான
மக்கள் கொல்லப்பட்டு செம்மணி கிராமத்திற்கு அருகில் உள்ள புதைகுழிகளில்
புதைக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.

செம்மணி சித்துப்பாத்தி மயானம்

அங்கு சுமார் 300 முதல் 400 உடல்கள்
புதைக்கப்பட்டதாக கிருசாந்தி படுகொலை வழக்கில் தண்டணை பெற்றுள்ள இராணுவத்தை
சேர்ந்த கோப்ரல் சோமரட்ன ராஜபக்ச தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அப்போது முழுமையான அகழ்வு மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போது அபிவிருத்தி
வேலைத்திட்டத்திற்காக நிலத்தை அகழ்ந்த போது மனித எச்சங்கள் கண்டு
பிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னனி அதனை
வெளிப்படுத்தியதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கமைய செம்மணி சித்துப்பாத்தி
மயானத்தில் இடம்பெற்று வரும் அகழ்வில் 200 ஐ கடந்த நிலையில் மனித எச்சங்கள்
மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழ்வு இடம்பெற்றும் வருகின்றது.

இதனால் இந்த
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலையே உள்ளது.

1998 யூலை இல் இலங்கை இராணுவ வீரர் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச மாணவி
கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்திரை கற்பழித்து படுகொலை
செய்ததற்காக மரண தண்டனையை எதிர்கொண்டார்.

குடாநாட்டில் இருந்து காணாமல்
போனவர்களின் உடல்கள் அடங்கிய புதைகுழிகள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக அவர்
குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ராஜபக்சவும் அவரது இணைப் பிரதிவாதிகளும்
இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பானதாகக் கூறப்படும் 20 பாதுகாப்புப் படை
வீரர்களின் பெயர்களைக் கொடுத்தனர். ஆனால் முறையான ஆய்வுகளோ, பக்கச்சார்பற்ற
நீதியான விசாரணைகளோ இடம் பெறவில்லை.

இதனையே செம்மணி சித்துபாத்தி புதிய
மனிதப்புதைகுழி வெளிப்படுத்தி நிற்கின்றது.

தற்போதும் சோமரட்ண ராஜபக்ஸ செம்மணி தொடர்பில் சர்வதேசத்திலும் சாட்சியமளிக்க
தயார் என தனது மனைவி மூலம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவிடம்
தெரிவித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டளவில் செம்மணி முகாம் தொடக்கம் தண்டி முகாம்
வரை இடம்பெற்ற கைதுகள், படுகொலைகள் மற்றும் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள்
தொடர்பில் மரண தண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷ செய்திருக்கும் முக்கிய
வெளிப்படுத்தல்கள் இங்கு திட்டமிட்ட படுகொலைகள் இடம்பெற்றதனை வெளிப்படுத்தி
நிற்கின்றது.

இவை அங்கு மனித பேரவலம் நடந்ததை வெளிப்படுத்தி நிற்கின்றது.

அந்தவகையில், தமிழ் இனத்தின் மீது திட்டமிட்டு படுகொலை புரிந்தமைக்கான சான்றாக
செம்மணி சித்துபாத்தி புதைகுழி மாறியிருக்கின்றது.

அதற்கு காரணம் அங்கு
ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தை முதல் முதியவர் வரை தமிழர் என்ற ஒரு
காரணத்திற்காகவே படுகொலை செய்து புதைக்கப்பட்டமைக்கான தடயங்கள் வெளிவந்து
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமையே.

அப்பட்டமான போர் விதி மீறலை முள்ளிவாய்கால்
மண் மட்டுமன்றி செம்மணி புதைகுழியும் வெளிப்படுத்தியுள்ளது. அந்த மண்
குருதியால் தோய்ந்துள்ளது.

இதற்கு சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நீதியான விசாரணை இடம்பெற வேண்டும்.

இச்
சம்பவம் இடம்பெற்ற போது யாழ் மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த படை தளபதிகள்
இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற விசாரணைகள் போன்று
செம்மணி சித்துபாத்தி விசாரணையும் கிடப்பில் போடப்படாது அது சர்வதேச சட்ட
திட்டங்களுக்கு அமைவாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதுடன், அதற்கு
பொறுப்பானவர்கள், துணை போனவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்.

கடந்த 29 ஆம் திகதி வடக்கு – கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் செம்மணி
உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கையெழுத்துப்
போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, இடம்பெற்று வருகின்றது.

புலம்பெயர் நாடுகள்
சிலவற்றிலும் செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி கோரி
போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அந்த நாட்டு தலைவர்களிடம் மகஜர்
கையளிப்புக்களும் இடம்பெற்றுள்ளது.

அணையா விளக்குப் போராட்டம் செம்மணிக்கு
நீதி கோரி இடம்பெற்ற போது ஐ.நா மணிதவுரிமைகள் ஆணையாளரும் செம்மணி புதைகுழியை
பார்த்து அஞ்சலி செலுத்தியிருநதார். அந்த மக்களின் ஏக்கங்களையும், வலிகளையும்
புரிந்து கொண்டவராக அவர் அங்கிருந்து சென்றிருந்தார்.

 ஜனாதிபதியின் விஜயம்

செம்மணியில்
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்றும் அப் பகுதியில்
இடம்பெற்றுள்ளது.

ஆக, செம்மணி மனிதப் புதைகுழி என்பது தமிழ் இனத்திற்கு எதிராக இலங்கை தீவில்
தொடர்ந்தும் இடம்பெற்ற, இடம்பெற்று வருகின்ற இனவழிப்பின் ஒரு அடையாளம் ஆகும்.

அதனை தமிழ் தலைமைகளும், பாதிக்கப்பட்ட தமிழ் தரப்பும் ஒற்றுமையாக கொண்டு சென்று
சர்வதேச பொறிமுறை ஊடாக தீர்வு காண முன்வரவேண்டும். அரசாங்கமும் பட்டலந்த வதை
முகாமுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சகோதர தமிழ் தேசிய இனத்தின்
படுகொலைகளுக்கும் கொடுக்க வேண்டும். அதுவே பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில்
அரசாங்கம் மீது நம்பிக்கையை கட்டியெழுப்ப உதவும்.

வடக்கிற்கு விஜயம் செய்த
ஜனாதிபதி செம்மணிக்கும் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழமை போல்
தமிழ் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சர்வதேச சமூகமும் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்திற்காக தமது மனச்சாட்சிகளை தட்டி
எழுப்பி நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

கொல்லப்பட்டவர்களை கொண்டு
வர முடியாது. ஆனாலும், குறைந்தபட்ச அந்த பரிகார நீதியே பாதிக்கப்பட்ட
மக்களுக்கான ஒரு தீர்வாக இருக்கப் போகின்றது.

அதன் மூலமே இந்த நாடு சுதந்திரம்
பெற்ற காலம் முதல் அடக்கி ஒடுக்கப்பட்டு வரும் தமிழ் தேசிய இனமும்
தன்மானத்துடன், இந்த நாட்டின் தேசிய இனமாக ஏனைய சகோதர இனங்களுடன
ஒற்றுமையாகவும், ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டு இதய சுத்தியுடனும் வாழக் கூடிய
நிலையை உருவாக்கும்.

இதுவே பல்லின கலாசாரப் பாண்பாட்டைக் கொண்ட இலங்கையை
முன்னோக்கி கொண்டு செல்ல வழிவகுக்கும். 

NO COMMENTS

Exit mobile version