Home இலங்கை அரசியல் தையிட்டி விகாரைக்கு பெருமளவு சிங்கள மக்களை அழைத்துவர திட்டம் : கஜேந்திரன் விடுத்துள்ள அழைப்பு

தையிட்டி விகாரைக்கு பெருமளவு சிங்கள மக்களை அழைத்துவர திட்டம் : கஜேந்திரன் விடுத்துள்ள அழைப்பு

0

எதிர்வரும் போயா தினத்தன்று தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு பெருமளவு அப்பாவி சிங்கள மக்களை அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்துள்ளார்.

குறித்த தினத்தில் நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ் மக்களும் பெருமளவில் கலந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தையிட்டியிலே தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து அங்கே ஒரு சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்டிருப்பது எல்லோருக்கும் தெரியும்.

தொடர்ச்சியான போராட்டம்

சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டு அந்த காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்பது அந்த காணி உரிமையாளர்களினதும் அரசியல் தரப்புகளினதும் சிவில் தரப்புகளினதும் கோரிக்கையாக உள்ளது.

அதனை வலியுறுத்தி கடந்த 2023 மே மாதம் முதல் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலே வருகின்ற பத்தாம் திகதி செவ்வாய்கிழமை பொசென் தினத்தன்று அந்த போராட்டம் அங்கே நடைபெறஇருக்கின்றது.

அங்கே வருகின்ற சிங்கள மக்களிற்கு உண்மையில் அங்கே என்ன நடக்கின்றது என்பது கூட தெரியாது.

இனவாதிகள் தென்பகுதியில் சொல்கின்ற பொய்கதைகளை நம்பி மக்கள் இங்கு வந்துகொண்டிருக்கின்றார்கள்.

உண்மைகளை அவர்களிற்கு தெரிவிக்கவேண்டும், இது ஒரு சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் என்பதையும், அது அகற்றப்படவேண்டும் என்பதையும்,  இவ்வாறு தமிழ் மக்களின் காணிகள் அமைக்கப்பட்டு விகாரைகள் அமைக்கப்படுவதனால் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் வெறுப்பும் வளர்க்கப்படுகின்றது.

 தமிழ் மக்களின் காணிகள்

ஆகவே சிங்கள மக்கள் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளிற்கு துணைபோகக்கூடாது.

சிங்கள மக்களும் எங்களுக்கு ஒத்துழைத்து இனவாதிகளிற்கு அழுத்தங்களை கொடுத்து தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கும் இந்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதற்கு சிங்கள மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவேண்டிய தேவையும் எங்களுக்கு இருக்கின்றது.

இந்த வகையிலே எதிர்வரும் பத்தாம் திகதி செவ்வாய்கிழமை போயா தினத்தன்று, காணி உரிமையாளர்களுடன் சேர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றோம். அந்த போராட்டத்திலே தமிழ் மக்களும் பெருமளவில் கலந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை அன்றைய தினத்தன்று இனவாதிகள் தென்பகுதியிலிருந்து பெருமளவு அப்பாவி சிங்கள மக்களை அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அவர்கள் அந்த பொதுமக்களை எந்த நோக்கத்திற்காக அழைத்து வருகின்றார்கள் என்பது எமக்கு தெரியவில்லை.

இருந்தாலும் நாங்கள் வழமை போன்று அமைதியான முறையிலே நீதிமன்ற கட்டளைகளுக்கு மதிப்பளித்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.

இந்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களினதும் ஆதரவை நாங்கள் கோரிநிற்கின்றோம்.

போராட்டத்தின் ஊடாக சர்வதேச சமூகத்தின் ஆதரவோடு இந்த காணிகளை மீளப்பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பிருக்கின்றது. ஆகவே மக்கள் நம்பிக்கையுடன் இந்த போராட்டத்திலே கலந்துகொள்ளவேண்டும்”  என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version