நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் பேரிடர் தொடர்பான வானிலை நிலைமைகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட அனைத்து கலந்துரையாடல்களின் தகவல்களையும் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஐந்து நிறுவனங்களிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (11.12.2025) குறித்த ஐந்து நிறுவனங்களுக்கும் சென்று இந்த கோரிக்கையை முன்வைக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்.
தகவல் திரட்டு
வானிலை ஆய்வு மையம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், நீர்ப்பாசனத் துறை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து இந்தத் தகவல்கள் கோரப்படவுள்ளன.
நவம்பர் 11 முதல் நவம்பர் 26 ஆம் திகதி வரையிலான வானிலை நிலைமைகள் தொடர்பில் இந்த நிறுவனங்கள் நடத்திய கலந்துரையாடல்கள் குறித்த தகவல்களுக்கு மேலதிகமாக, பொறுப்பான அதிகாரிகள் நடத்திய கூட்டங்களின் தகவல் அறிக்கைகள் மற்றும் நிகழ்நிலை மூலமான காணொளிகளையும் கோரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் பாரிய ஒரு பேரிடர் இடம்பெற்றுள்ள இந்த நேரத்தில், குறித்த நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட்டன, அதற்கு அரசு அதிகாரிகள் எவ்வாறு பதிலளித்தனர் என்பதை அறிந்து கொள்வது நாட்டிற்கு முக்கியம் என்பதால் இந்தத் தகவல்கள் கோரப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் சுட்டிக்காட்டினார்.
