Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை! வரவேற்றுள்ள ஐ.எம்.எப்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை! வரவேற்றுள்ள ஐ.எம்.எப்

0

சீனா (China) மற்றும் கடன் வழங்குநர்களுடன் இலங்கை (Sri Lanka) கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை நிறைவு செய்தமை, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் நடவடிக்கையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.  

இலங்கைக்கும் வெளிநாட்டு கடன் வழங்குநர் குழுவுக்கும் இடையில் கடன் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தம் நேற்றைய தினம் (27) கைச்சாத்திடப்பட்ட நிலையிலேயே, நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடன் வழங்கிய நாடுகளுடன் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாட்டை அரசாங்கம் எட்டியுள்ளது.

பொருளாதார மீட்சி

இந்த நிலையில், பொருளாதார மீட்சிக்கான பயணத்தின் முக்கிய மைல்கற்களான கடன் உடன்படிக்கைகளை நிறைவு செய்தல் போன்ற கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் நிலைத்தன்மையை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக இலங்கை மேற்கொண்டுள்ள முக்கிய நடவடிக்கை பாராட்டத்தக்கது என பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தனியார் கடன் வழங்குநர்களுடனான உடன்படிக்கைகளை எதிர்காலத்தில் அரசாங்கம் விரைவில் ஏற்படுத்திக் கொள்ளும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு

இதேவேளை, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கி அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்பட்டதை இந்தியா வரவேற்றுள்ளது.

இதன்படி, இலங்கையின் முக்கிய பொருளாதாரத் துறைகளில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான ஆதரவுகளை இந்தியா தொடர்ந்தும் வழங்குமென அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடன் வழங்கும் நாடுகளுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதை இலங்கைக்கான அமெரிக்க (America) தூதுவர் ஜுலி சங் (Julie Chung) வரவேற்றுள்ளதுடன், இந்த ஒப்பந்தம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்குப் பெரிதும் உதவும் என தெரிவித்துள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version