முதலாம் நிலை சுகாதாரப் பராமரிப்பு முறைமையை மேம்படுத்துவதற்காக உலக வங்கியின்
சர்வதேச அபிவிருத்தி சங்கத்துடன் இலங்கை அரசாங்கம் 150 மில்லியன் அமெரிக்க
டொலருக்கான நிதியியல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இத்திட்டமானது 2024 முதல் 2028 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தொற்றா நோய்கள் முகாமைத்துவம், முதியோர் மற்றும் நோய்த்தணிப்பு
பராமரிப்பு, சமூக மட்டத்திலான சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் காலநிலை
தொடர்பான அவசர நிலைகளுக்கு எதிராகத் தாங்கும் திறனை கட்டியெழுப்புதல்
ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
வாகனக் கொள்வனவு
இத்திட்டத்தின் முக்கிய சவாலான, கள உத்தியோகத்தர்களுக்கான போதிய போக்குவரத்து
வசதியின்மைக்குத் தீர்வுகாணும் வகையில், அமைச்சரவை முக்கிய வாகனக்
கொள்வனவுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
களப்பணிகளின் வினைத்திறனை அதிகரிக்கும் வகையில், பொதுச் சுகாதார
தாதியர்களுக்காக 2,891 ஸ்கூட்டர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்காக
1,350 மோட்டார் சைக்கிள்கள், மருத்துவக் கழிவுப் போக்குவரத்துக்காக 26
லொறிகள், 26 இரட்டைக் கப்கள், மருத்துவப் பொருட்கள் பிரிவுக்கு 20
குளிரூட்டப்பட்ட டிரக்குகள் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்துக்காக நோயாளர்காவுவண்டிகள் உட்படப் பல அத்தியாவசிய வாகனங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
இந்த முன்னெடுப்பானது நாட்டின் முதலாம் நிலை சுகாதாரப் பராமரிப்பு
உட்கட்டமைப்பை வலுப்படுத்தி, சமூக சுகாதாரப் பரம்பலை விரிவாக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
