Courtesy: Sivaa Mayuri
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை, இலங்கை அரசாங்கம் தொடர்ந்து துன்புறுத்துகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
தமது உரிமைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துகின்றபோது, இலங்கையின் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு, மிரட்டல், பொய்யான குற்றச்சாட்டுகள், வன்முறை மற்றும் தன்னிச்சையான கைதுகள் மூலம், காணாமல் போனோரின் குடும்பங்களை தொடர்ந்து துன்புறுத்துகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திருகோணமலையில் ஒகஸ்ட் 30 அன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தைக் குறிக்கும் வகையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊர்வலம் நடத்துவதைத் தடை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நூற்றுக்கணக்கான தாய்மார்கள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அன்றாடம் வேதனையில் வாடுகின்றனர்.
எனினும் இலங்கையின் அரச அமைப்புகள், அவர்களை அமைதியாக்க முயற்சிக்கின்றன, அத்துடன் கொடூரமான முறையில் நடத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளார்.
நூற்றுக்கணக்கான தாய்மார்கள், மனைவிகள் மற்றும் பலர் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமலேயே காலமானார்கள், மேலும் பலர் தாம் வாழும் போதே நீதியை பார்க்க முடியாது என்று ஆதங்கப்படுகின்றனர்.
உள்நாட்டுப் போர்
இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுன கிளர்ச்சியின் போது (1987-89) காணாமல் போனவர்கள் மற்றும் அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (1983-2009) இடையிலான உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களை பொறுத்தவரை, உலகின் காணாமல் போனோர் வரலாற்றில் அதிகம் தொகையினராகும்.
எனினும் இலங்கை அதிகாரிகள் பல தசாப்தங்களாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தலைவிதியை வெளிப்படுத்தவோ அல்லது அதற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரவோ மறுத்து வருகின்றனர்.
இதுவே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், சர்வதேச வழக்குகளுக்கு அழைப்பு விடுக்க வழிவகுத்துள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.