Home இலங்கை சமூகம் அரசாங்கத்தின் உண்மை முகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது

அரசாங்கத்தின் உண்மை முகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது

0

அரசாங்கத்தின் உண்மை முகம் வெளிப்படத் தொடங்கியுள்ளதாக இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடக நிறுவனங்களின் ஒளிபரப்பு அனுமதிகளை ரத்து செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள், பேச்சுச் சுதந்திரத்தையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் மட்டுமல்லாது, ஊடக சுதந்திரத்தையும் கடுமையாக ஒடுக்குகின்ற செயலாகும் என தெரிவித்துள்ளது.

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் (SLPJ) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசுடன் தொடர்புடைய தரப்பொன்றின் கஞ்சா செய்தியொன்றை தொடர்பான செய்தி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, தனியார் ஊடக நிறுவனத்தின் ஒளிபரப்பு அனுமதியை ரத்து செய்யுமாறு பொலிஸார் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளமை, சங்கத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், அம்புளுவாவ உயிரியல் பல்வகைத் தொகுதி தொடர்பில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி மற்றும் ஊழல் விவகாரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியமைக்கு எதிராக, பத்திரிகையாளர் தரிந்து ஜயவர்தனவை இன்று கம்பளை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் வெறும் தகவல் சேகரிப்புக்கானவை அல்ல; அரசின் கட்டுப்பாட்டுக்கு அடங்காத பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத அடக்குமுறையாகும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தவறான செய்திகள் வெளியிடப்பட்டிருந்தால், அதற்காக செயல்பட ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டபூர்வ நடைமுறைகள் உள்ள நிலையில், பொலிஸார் இவ்வாறு நேரடியாக தலையிடுவது பொலிஸ் இராச்சியத்தின் அறிகுறியாகும் எனவும் அந்த சங்கம் கூறியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசின் கடந்த 15 மாத காலப்பகுதியை மதிப்பாய்வு செய்துள்ள உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், ஊடக சுதந்திரத்தின் ‘ஆட்டுத் தோலை’ போர்த்திக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசு, தற்போது தனது உண்மையான ‘ஓநாய் முகத்தை’ வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை சுருக்கும் இந்த வெட்கமற்ற முயற்சிகளை உடனடியாக நிறுத்துமாறு அரசை வலியுறுத்தும் அந்த சங்கம், ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version