Home இலங்கை குற்றம் மீண்டும் மீண்டும் பகிடிவதை! அதிர்ச்சியளிக்கும் பல்கலை மாணவர்களின் காணொளி வெளியானது

மீண்டும் மீண்டும் பகிடிவதை! அதிர்ச்சியளிக்கும் பல்கலை மாணவர்களின் காணொளி வெளியானது

0

இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் கடுமையான பகிடிவதைக்கு உட்படுவது போன்ற காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது.

இது குறித்து பகிடிவதைக்கு உள்ளான மாணவர்கள் பல்கலையின் துணைவேந்தருக்கு முறைப்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துன்புறுத்தல் காணொளி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையிலான காணொளி வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் அதிகாலை 2 மணியளவில் குறித்த மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்து இவ்வாறு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான மாணவர்களுள் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவ சிகிச்சைப் பெற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.

இதுபோன்று பல தடவைகள் கடுமையான தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் பல்கலையின் மேலிடத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

அண்மையில், சபரகமுவ பல்கலைக்கழகத்தில் கடுமையான பகிடிவதைக்கு உள்ளான மாணவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட பின்னர் பகிடிவதை தொடர்பான கவனம் மேலும் வலுப்பெற்றது.

இருப்பினும், இதுபோன்ற அநியாய உயிரிழப்புக்களைப் பார்த்தும் கூட சில மாணவர்கள் தங்களுடை பலத்தை பிறருக்கும் காண்பிக்கும் பொருட்டு இவ்வாறான தகாத வன்செயல்களில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக, காலத்திற்கு காலம் பகிடிவதை தொடர்பில் பேசினாலும் கூட இதற்கொரு தீர்வில்லை என்பது வருந்தத்தக்க உண்மையாகும்.

அதிலும், தாங்கள் பகிடிவதைக்கு உள்ளாகி பல சிரமங்களுக்கு உள்ளானதை, தமக்கு அடுத்தப்படியாக கற்க வரும் இளைய மாணவர்களும் அனுபவிக்க வேண்டும் என நினைப்பதெல்லாம் மாற்றப்பட வேண்டிய ஒரு மன நிலையாகும்.

தாங்கள் அடைந்த துயரங்கள் தங்களுக்கு கீழ் கற்க வருபவர்களுக்கு நேராமல் பாதுகாப்பதும் மாணவர்களின் மிகப்பெரிய கடமையாகும்.

பகிடிவதைக்கு உள்ளாகும் ஒவ்வொரு மாணவனும், தனி ஒருவர் அல்ல, மாறாக அவர் ஒரு முழு குடும்பத்தின் கனவு, கௌரவம். இன்னும் சொல்லப் போனால் ஒரு முழு குடும்பத்தின் வாழ்க்கையும் கூட அந்த மாணவனாக இருக்கலாம்.

பகிடிவதை போன்ற முட்டாள்த் தனமான, பிறர் துயருறுவதைக் கண்டு மகிழ்ச்சியடையும் கொடூர மனநிலையில் இருந்து மாணவர்கள் வெளிவரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

NO COMMENTS

Exit mobile version