ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி தினமான இன்று (15) கொழும்பில் (Colombo) விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தப் பாதுகாப்பு திட்டங்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட போக்குவரத்துத் திட்டம்
இராஜகிரியவில் உள்ள தேர்தல் அலுவலகத்தை அண்மித்த வீதிகளில் நாளைய தினம் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வருகைதரும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளருடன் கட்சியின் செயலாளர் உட்பட இருவருக்கு மாத்திரமே வேட்புமனு ஏற்கும் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
அவர்களைத் தவிர மேலும் மூவர் தேர்தல் அலுவலக வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.