மொனராகல, செவனகல பிரதேசத்தில் சுமார் 200 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசேட சுற்றிவளைப்பின் போது 54 கிலோகிராம் ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய ஹெரோயின் தொகை இதுவாகும் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
புதைக்கப்பட்ட பொருள்
செவனகல, கிரிவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்களில் அடைத்து சூட்சுமமான முறையில் புதைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய வீட்டில் வசிக்கும் கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்பு
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் ஹெரோயின் தொகை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தம்பதியினரில் பெண் கடந்த 30ஆம் திகதியன்று பிலியந்தலை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஓமல்பகே தம்மிக்க சமன்குமாரவின் சகோதரி எனத் தெரியவந்துள்ளது.