தற்போதைக்கு நிலுவையில் உள்ள சிறுவர் பாலியல் சீண்டல் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கான திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாலியல் சீண்டல் தொடர்பான சுமார் 40,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பல ஆண்டுகளாக சில வழக்குகளுக்கான தீர்ப்பு வழங்கப்படும் செயற்பாடுகள் தாமதமாகி வருவதால் சிக்கல் நிறைந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுவர்களுக்கு நீதி
குறித்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை விரைவுபடுத்த சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் உதவியைப் பெறுவதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
