Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் வங்கி ஊடான நிதியறிக்கைகளை பேணாது செயற்படும் விளையாட்டுக்கழகம்

முல்லைத்தீவில் வங்கி ஊடான நிதியறிக்கைகளை பேணாது செயற்படும் விளையாட்டுக்கழகம்

0

Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவில் உள்ள விளையாட்டுக் கழகமொன்று தன்னுடைய நிதியறிக்கைகளை பேணாது பல இலட்சம் பெறுமதியான நிதிச் செலவுகளுடைய செயற்பாடுகளை செய்து வருகிறது.

விளையாட்டு கழகத்தின் பெயரில் வங்கி கணக்கு பேணப்படுகின்ற போதும் அதனூடாக நிதி நடவடிக்கைகளை பேணுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுகின்றது.

அண்மையில் நடைபெற்ற புதிய நிர்வாக தெரிவின் பின்னரான புதிய நிர்வாகத்தினருக்கு கழகத்தின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கான நிதியில்லாத நிலையினை எதிர்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை உருவாகிருந்ததாக அவ் விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

புலம் பெயர்ந்து வாழும் அக்கிராமத்தினைச் சேர்ந்த பலரால் கழகத்திற்காக நிதியுதவி செய்யப்பட்டு பல செயற்பாடுகளை அக்கழகத்தினர் செய்திருந்த போதும் கழகத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கான நிதியினை பேணாதிருந்தது கழகத்தின் மோசமான நிதி நடவடிக்கைகக்கு சிறந்த உதாரணமாக எடுத்துக் காட்டலாம்.

நிதி மோசடி

வங்கி கணக்கின் ஊடாக நிதியினை பெற்று செலவுகளை திட்டமிடாத நிதி நிர்வாகத்தினை பேணுதலும் மோசடிகளுக்கு வழிவகுக்கும் என்பது வெளிப்படையான விடயமாகும்.

அப்படி இருந்த போதும் விளையாட்டு கழகத்திற்கு கிடைத்திருந்த குறிப்பிட தொகை நிதி மட்டுமே வங்கிக்கணக்கு ஊடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கழகத்தின் உறுப்பினர் ஒருவருடன் உரையாடும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

கால்பந்தாட்டத்தினை (football) முதன்மை விளையாட்டாக விளையாடி வரும் அணியினரை கொண்டுள்ள இக்கழகம் கிரிக்கெட், எல்லே, கபடி என பல விளையாட்டுக்களினை மாவட்ட மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கெடுப்பதற்காக அணிகளை அனுப்பியிருக்கின்றது.

அத்தோடு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்குமான விளையாட்டு அணிகளை பேணிக் கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

பரந்துபட்டளவில் மிகத் திறமையான செயற்பாடுகளை கடந்த காலங்களில் மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்ட விளையாட்டுக்களிலும் வெளிக்காட்டி பலரது பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் இப்போது புதிய நிர்வாகத்தினர் தங்கள் செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல நிதியில்லாத நிலையை எதிர்கொள்கின்றனர்.

முன்னைய நிர்வாகத்தினரால் நிதி மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகத்தினையும் கழகத்தின் ஒரு பிரிவினர் உருவாக்கியுள்ளதையும் அவர் தொடர்ந்து வெளிப்படுத்தியிருந்தார்.

சம்மேளனத்தின் செயல் 

மாவட்ட மட்டத்தில் பிரதேச விளையாட்டு கழகங்களை ஒருங்கிணைக்கும் வகையில் சம்மேளனங்கள் இருக்கின்றன.

உதைபந்தாட்ட விளையாட்டு கழகங்களை பதிவு செய்து கண்காணித்து வருவதற்காக உதைபந்தாட்ட சேம்மேளனம் (லீக் என குறிப்பாக விளையாட்டு கழகங்களால் அழைக்கப்படும்) மாவட்ட மட்டத்தில் செயற்பட்டு வருகின்றது.

கழக நிர்வாகம் தொடர்பான எல்லா விடயங்களையும் சம்மேளனத்திற்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும்.அத்தோடு கழகத்தினால் முன்னெடுக்கப்படும் அணிகளுக்கிடையிலான போட்டி விளையாட்டுக்களை செயற்படுத்துவதற்காக சம்மேளனத்திடம் முன் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.
என சம்மேளனத்தினால் விளையாட்டுக் கழகங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருவதையும் அவதானிக்கலாம்.

அப்படி இருக்கும் போது விளையாட்டு கழகங்களின் நிதியறிக்கைகளை மட்டும் விளையாட்டு கழகங்களுக்கான சம்மேளனம் கண்காணிப்பதில்லை என விளையாட்டு கழகங்கள் சார்பில் மேற்கொண்ட தேடலின் போது அறிய முடிகின்றது.

செயற்பாட்டறிக்கைகளையும் நிதி அறிக்கைகளையும் மாதாந்த அடிப்படையில் பேணுவதோடு அதனை கண்காணிப்புக்குட்படுத்த வேண்டும்.
கணக்கறிக்கைகளை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

அப்போது தான் சிறந்த வளர்ச்சி நோக்கிய நிலையினை விளையாட்டு கழகங்களால் எட்ட முடிந்து உயர்நிலை மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என சமூகவியல் கற்றலாளர் வரதன் இது தொடர்பில் தன் கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

பெரும் தொகை நிதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல விளையாட்டு கழகங்களால் பெரும் தொகையில் நிதி கையாளப்படுகின்ற போதும் அவை பெறப்படும் முறை மற்றும் செலவிடப்படும் முறை என்பன தொடர்பில் ஆய்வுகளை பொறுப்பு வாய்ந்த மாவட்ட மட்ட நிதியதிகாரிகள் மேற்கொண்டு, ஆலோசனைகளை வழங்கி, முன்னகர்த்திச் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு பல சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுவதும் நோக்கத்தக்கது.

அத்தோடு, விளையாட்டு கழகங்களுக்கான புலம் பெயர் நிதியுதவியாளர்களால் கழக வீரர்கள் முறைகேடான முறையில் வழிநடத்தப்பட்ட பல சந்தர்ப்பங்களையும் தேடலின் போது இனம் காண முடிந்தது.

எனினும் இது தொடர்பில் உத்தியோக பூர்வமாக ஆராய்ந்து தகவல்களை சேகரிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையினையும் எதிர்கொள்ள முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூரில் உள்ள வசதி வாய்ப்புக்களை கொண்ட தொழில் முனைவோர் மற்றும் செல்வந்தர்களாலும் இவ் விளையாட்டு கழகங்கள் நிதியீட்டத்தினை பெற்றுக் கொள்கின்றன.

மேற்குறிப்பிட்ட விளையாட்டு கழகம் தன் புதிய நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு நிதியில்லை என்ற போதும் அந்த கழகத்தின் புதிய நிர்வாகத்தில் அங்கம் வகிப்பவரும் அவ்வூர் செல்வந்தர்களில் ஒருவருமான ஒரு தன்னார்வலரின் பெரும் தொகை நிதியுதவியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி ஒன்றினை மாவட்ட மட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் செய்து முடித்திருந்தது.

ஆயினும், இந்த நிதி கூட அவ்விளையாட்டு கழகத்தின் வங்கி கணக்கின் ஊடாக பரிமாற்றப்படவில்லை என அக்கழகம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தகவல்கள் நம்பத்தகுந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடியில் பொதுமக்கள் இருக்கின்ற போது திட்டமிட்ட முறையில் பொருத்தப்பாடான வழிமுறைகளில் நிதியினை விளையாட்டு கழகங்கள் செலவிடவில்லை என்ற தங்கள் ஆதங்கத்தினை சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் வெளிப்படுத்தியிருந்தார்.

முறைப்படியான ஆய்வு 

சட்ட வரையறைக்குள் கட்டுப்பட்ட முறையிலான ஆய்வுகளை செய்யும் போது முறைப்படியான மாற்றங்களை விளையாட்டு கழகங்களிடையே எதிர்காலத்தில் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இந்த முயற்சியில் மாவட்ட மட்டத்தில் விளையாட்டு கழகங்களின் சம்மேளனம் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் மாவட்ட மட்ட பொறுப்பதிகாரிகள் சிந்திக்கத் தலைப்பட வேண்டும்.

விளையாட்டு கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள், நிதி, கழகத்தின் செயற்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள், வளர்ச்சிப் படிகள், சமூக நலத் திட்டங்கள், விளையாட்டு வீரர்கள் சார்ந்த நலத் திட்டம் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சார்ந்த அக்கறை என விரிவான நோக்கங்கள் சார்ந்து சிந்தித்துச் செயற;பட முற்பட வேண்டும்.

அப்போது தான் ஆரோக்கியமான மாற்றங்களை விளையாட்டு கழகங்கள் மூலம் உருவாக்கிவிட முடியும்.

இவை அத்தனைக்கும் ஒவ்வொரு விளையாட்டு கழகமும் தனது நிதி மூல செயற்பாட்டு அறிக்கைகளை உரிய முறைப்படி பேண வேண்டும்.

மாற்றம் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.            

NO COMMENTS

Exit mobile version