Home இலங்கை நேபாளத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி!

நேபாளத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி!

0

நேபாளத்தைத் தாக்கிய திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த நிதியுதவி வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், அந்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரணத்தையும் மனிதாபிமான உதவிகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்டகால நட்புறவு

வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் மக்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து ஜனாதிபதி தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கை நேபாள மக்களுடன் உறுதியாக நிற்கிறது என்று வலியுறுத்தியுள்ளார்.

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள்

இதற்கிடையில், இன்று காலை நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கானலுடன் தொலைபேசி உரையாடலில் வெளியுறவு அமைச்சர் விஜய ஹேரத் இலங்கையின் இரங்கலையும், ஆதரவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, நேபாளத்தில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக, எதிர்காலத்தில் இலங்கையால் வழங்கக் கூடிய பிற பொருத்தமான ஒத்துழைப்பு வழிமுறைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

Source: https://ibctamil.com/article/sri-lanka-donates-one-million-dollars-aid-to-nepal-1787851517

NO COMMENTS

Exit mobile version