புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டதால் பெண்கள் மதுபானம் வாங்கவும், மதுபானம் தொடர்பான தொழில்களில் ஈடுபடவும், உரிமம் பெற்ற இடங்களில் மது அருந்தவும் அனுமதி கோரி பெண்ணிய ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம்
தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த உத்தரவை நேற்று (23) உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
முன்னதாக பெண்கள் மதுபான உற்பத்தி அல்லது விற்பனையில் ஈடுபடுவதிலிருந்தோ
அல்லது மதுபான சாலைகளில் மதுபானம் வாங்குவதிலிருந்தோ தடை விதிக்கும் வகையில்
வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டது.
பெண்ணுரிமை
இதனை சவாலுக்கு உட்படுத்தி 2018 ஆம் ஆண்டு பெண்ணுரிமை ஆர்வலர்கள் மற்றும்
மகளிர் அமைப்பினர் இந்த வழக்கை தாக்கல் செய்தனர்.
பெண்களுக்கான மதுபானம் தொடர்பான ஒழுங்குமுறை பாரபட்சமானது என்றும்
அரசியலமைப்பின் பிரிவுகள் 12(1) மற்றும் 12(2) இன் கீழ் சமத்துவத்துக்கான
பெண்களின் உரிமைகளை மீறுவதாகவும் மனுதாரர்கள் வாதிட்டனர்.
மதுபான விற்பனை
இந்தநிலையில், கட்டுப்பாடுகளை விதித்த முந்தைய வர்த்தமானியை ரத்து செய்து,
புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மனுதாரர்கள் இனி வழக்கைத் தொடர
விரும்பவில்லை என உயர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர்.
இதன்படி, நீதியரசர்களான எஸ். துரைராஜா, மஹிந்த சமயவர்தன மற்றும் மேனகா
விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம் மனுவை தள்ளுபடி செய்தது.
தற்போது பெண்களுக்கும் மதுபான விற்பனை, உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்பாக
ஆண்களைப் போலவே சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்படுவதால் இந்த அனுமதி இலங்கையில்
பாலின சமத்துவத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாக இது உள்ளதென பெண்ணிய
ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
