இலங்கைத் தபால் திணைக்களத்தை, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறுசீரமைக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதன் பிரகாரம் தபால் சேவையானது, புதிய மாற்றங்களுடன் கூடிய நம்பகத்தன்மை மிக்க சேவையாக உருவாக்கப்படவுள்ளது.
இதற்கமைய, தபால் சேவை தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகளை உள்ளடக்கிய வகையில் ஒழுங்கமைக்கப்படவுள்ளது.
வருமான ஆதாரங்கள்
அதேவேளை, வருமானம் ஈட்டக்கூடிய பல துறைகளை தபால் திணைக்களம் கொண்டுள்ளது.
ஆகையால், தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் திணைக்களத்தின் வருமான ஆதாரங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
மேலும், தபால் சேவையில் உள்ள ஒரு சில துறைகள் தவற விடப்பட்டும், கவனத்தில் கொள்ளப்படாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
எனவே, எதிர்வரும் நாட்களில் தபால் சேவையை மக்கள் விரும்பத்தக்க வகையில் புதிய மாற்றங்களுடன் கூடிய பன்முக சேவைகளை வழங்குவதுடன், இலங்கைத் தபால் திணைக்களத்தின் வாடிக்கையாளர்களின் திருப்தியை கருத்தில் கொண்டு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய மாற்றங்களுடன் கூடிய நம்பகத்தன்மையான தபால் சேவையை உருவாக்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.