உத்தேச சொத்து வரியானது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குப் பின்னர் நடைமுறைக்கு வரும் என்றும் 90% சாதாரண மக்களை பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (22) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya) தெரிவித்துள்ளார்.
முற்போக்கான திட்டம்
இந்த வரியானது உலகளவில் பல நாடுகளில் முன்னிலைப்படுத்தப்படுவதாகவும் இதற்கு முன்னர் முன்னாள் நிதி அமைச்சர் என்.எம்.பெரேராவினால் (N. M. Perera) அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இது மிகவும் முற்போக்கான திட்டம் என அவர் வர்ணித்ததுடன் இந்த வரி முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்காலத்தில் சாமானியர்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரியின் அளவைக் குறைத்து இந்த வரியின் மூலம் அனைவரும் பயன்பெற முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.