அரிய வகையான உருண்டை மலைப்பாம்பு குட்டிகள் மூன்றை கடத்திச் செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவரை கைது செய்துள்ளதாக தாய்லாந்து அறிவித்துள்ளது.
குறித்த நபர் தனது ஆடைக்குள் மூன்று மலைப்பாம்பு குட்டிகளை மறைத்து வைத்து, தாய்லாந்தின் சுவர்ணபூமி விமான நிலையம் ஊடாக கடத்த முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கடத்தல்காரர், வனவிலங்கு கடத்தலில் ஈடுபட்டமைக்கான குற்றப் பதிவுகளை ஏற்கனவே கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.
உருண்டை மலைப்பாம்புகள்
தாய்லாந்தின் வனவிலங்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே இந்த மலைப்பாம்புகள் மீட்கப்பட்டன.
உருண்டை மலைப்பாம்புகள் என அடையாளம் காணப்பட்ட இந்த உயிரினங்கள், அழிந்துவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த சாசனத்தின்(CITES) கீழ் பாதுகாக்கப்பட வேண்டியவை ஆகும்.
கைது செய்யப்படடுள்ள சந்தேகநபர், 2024ஆம் ஆண்டில் கொழும்பில் பல்வேறு வகையான வனவிலங்குகளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்பதும், ஓநாய்கள், மீர்கேட்கள், அரியவகை கிளிகள், ஆமைகள் உள்ளிட்ட பல உயிரினங்களை சட்டவிரோதமாக வர்த்தகம் செய்தவர் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
