சர்ச்சைக்குரிய ஊடக ஒழுங்குமுறை சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு
வெளியிட்ட, மாலைத்தீவில் உள்ள ஊடகர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில்,
கொழும்பில் உள்ள மாலைத்தீவு உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே இலங்கை
ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர் குழுவினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்றையதினம்(17) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என்று விமர்சகர்களால் விபரிக்கப்பட்ட இந்த
சட்டமூலம், நேற்று மாலேயில் நடந்த விசேட நாடாளுமன்றக் கூட்டத்தில், ஊடகர்கள்,
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றத்துக்கு வெளியே
கூடியிருந்த பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றப்பட்டது.
கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கை குழுவினர் மாலைத்தீவு
உயர்ஸ்தானிகரிடம் ஒரு கடிதத்தை ஒப்படைத்துள்ளனர்.
மாலைத்தீவு அரசாங்கம் கருத்து வேறுபாடுகள், எதிர்க்கட்சிகளின் குரல்கள்
உள்ளிட்ட கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும் என அந்த கடிதத்தில்
வலியுறுத்தியிருந்தனர்.
இதேவேளை, மாலைத்தீவில் உள்ள ஊடக அமைப்புகள், எதிர்க்கட்சிகள் மற்றும் உரிமைக்
குழுக்கள் இந்த சட்டம் ஊடக சுதந்திரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று
எச்சரித்துள்ளன.
