இலங்கையை உலுக்கிய கொத்மலை பேருந்து விபத்தில் மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பேராதனை போதனா மருத்துவமனையின் (Teaching Hospital Peradeniya) இயக்குநர் ஏ.எம்.எஸ் வீரபண்டார தெரிவித்துள்ளார்.
கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி ஏற்பட்ட விபத்து நாட்டையே பெரும் சோகத்தில் தள்ளியிருந்தது.
குழந்தையின் உடல்நிலை
விபத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்திருந்ததுடன் பெரும்பாலானவர்கள் பலத்த காயக்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளின் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த விபத்தில் தனது ஆறு குழந்தையை காப்பாற்ற தாயொருவர் மேற்கொண்ட பாச போராட்டம் சமூக ஊடகங்களில் பரவி மக்களின் மனதை கலங்க வைத்திருந்தது.
அந்த பாசப்போராட்டத்தில் தாய் குழந்தையை காப்பாற்றிய நிலையில் அவர் உயிரிழந்தார்.
இந்தநிலையில், காப்பாற்றப்பட்ட குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக வீரபண்டார தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சை
அத்தோடு, கம்பளை மருத்துவமனையில் இருந்து ஆறு மாத குழந்தை, ஆறு மற்றும் 11 வயதுடைய இரண்டு குழந்தைகள் தனது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூவரில் ஆறு மாதக் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதியம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், குழந்தையின் முதுகெலும்பு, சிறுநீர் பாதை மற்றும் மார்பு குழிக்கு அருகில் அடிவயிற்றின் கீழ் பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைக்கு மற்றொரு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
