Home இலங்கை அரசியல் உங்களுக்கு தைரியம் இல்லை.. சிறீதரன் எம்பி விடுத்த எச்சரிக்கை!

உங்களுக்கு தைரியம் இல்லை.. சிறீதரன் எம்பி விடுத்த எச்சரிக்கை!

0

உண்மைக்கும் அறத்துக்கும் மாறான வகையில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
சாமர சம்பத் தசநாயக்கவினால் தனக்கு எதிராக நாடாளுமன்றச் சிறப்புரிமை மீறல்
பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றச் சிறப்புரிமையை மீறியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு
தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று சபையில் குறிப்பிட்டுள்ளார்.

2026ஆம் ஆண்டு பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல் நாள் விவாதத்தில்
கலந்துகொண்டு அவர் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

முன்னதாக, நாடாளுமன்றச் சிறப்புரிமையை சிறீதரன் எம்.பி. மீறினார் எனக்
குறிப்பிட்டு சாமர சம்பத் தசநாயக்க எம்.பியால் நாடாளுமன்றச் சிறப்புரிமை
மீறல் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த சிறீதரன்,

“பொது நலன் மற்றும் மக்கள் நலனில் கவனம் எடுத்து எனது முடிவுகளை மிகத் தெளிவாக
அரசமைப்பு சபையில் முன்வைத்துள்ளேன்.

எனது கட்சிக்காகவோ, தனிநபர்களின் அழுத்தத்துக்காகவோ எனது முடிவுகளை நான்
மாற்றிக் கொள்ளவில்லை.

 சட்ட நடவடிக்கை

எந்தவித வெளிப்புற அழுத்தமும் என் மீது பிரயோகிக்கப்படவில்லை, பிரயோகிக்கவும்
முடியாது என்பதைக் கடந்த ஓராண்டு காலமாக நேர்மையுடனும், கண்ணியத்துடனும்
நிரூபித்துள்ளேன்.

சிவில் புத்தி பெரமுன எனப்படும் அமைப்பைச் சேர்ந்த ஒருவரால் நிதிக் குற்றப்
புலனாய்வுப் பிரிவில் நான் சொத்துக்கள் குவித்து வைத்திருப்பதாகவே கடந்த ஜூலை
மாதம் முறைப்பாடு செய்யப்பட்டதாக நாளிதழ்களிலும், சமூக ஊடகங்களிலும்
பார்வையிட்டு இருந்தேன்.

குறித்த செய்திக்குப் பின்னர் வெளிப்படையான விசாரணைகளை செய்து உண்மையை
வெளிப்படுத்துமாறு கூறியிருந்தேன்.

இன்று 3 மாதங்கள் ஆகியும் நிதிகே குற்றப் புலனாய்வுப் பிரிவால் எந்த
முடிவுகளும் வெளியிடப்படவில்லை.

எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்களது பெயரிலோ சொத்துக்கள் இருந்தால்
விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பகிரங்கமாகக் கேட்கின்றேன்.

எனது பெயரிலோ, எனது சிபாரிசிலோ கடந்த காலங்களில் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்
பத்திரங்கள் ஏதும் பெற்றிருந்தால் உடன் வெளிப்படுத்தி என் மீது சட்டநடவடிக்கை
எடுக்குமாறு கோருகின்றேன்.

ஊவா மாகாணத்தின் முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க பணியாற்றிய போது அவர் ஒரு
தமிழ்ப் பெண் அதிபரை முழங்காலில் இருத்தி வைத்து விசாரித்த ஒரு மனநோயாளி
என்பதையும் நான் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன். என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் பட்சத்தில் நானா பதவி
விலகவும் தயாராகவுள்ளேன்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version