இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்லியன்
வரை அபாயகரமாக உயர்ந்துள்ளதாக இலங்கை விலங்குகள் நலச் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த அபரிமிதமான அதிகரிப்பால், ஒவ்வொரு வருடமும் சுமார் 250,000 நாய்க்கடி
சம்பவங்கள் பதிவாவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டியில் நேற்று (12) ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய விலங்கு நலன் மூலம்
சமூகப் பாதுகாப்பிற்கான கண்டிச் சங்கத்தின் செயலாளர் சம்பா
பெர்னாண்டோ , இந்த நிலைமை மிகவும் தீவிரமடைந்து வருவதாகவும், “நாம் வெடிக்கக்
காத்திருக்கும் ஒரு எரிமலை மீது அமர்ந்திருக்கிறோம்” என்றும் எச்சரித்தார்.
எண்ணிக்கை உயர்வு
பெண் நாய்கள் ஆண்டுக்கு இருமுறை குட்டி ஈனுவதால், தற்போது இலங்கையில் ஒவ்வொரு
எட்டு மனிதர்களுக்கும் ஒரு தெரு நாய் என்ற விகிதத்தில் எண்ணிக்கை
உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு நாய்கள் நலனுக்காக வரவுசெலவுத் திட்டத்தில் ரூ. 100 மில்லியன்
ஒதுக்கப்பட்டதை வரவேற்ற அவர், கடந்த ஆண்டு இனப்பெருக்கக் கட்டுப்பாட்டிற்காக
ஒதுக்கப்பட்ட ரூ. 184 மில்லியனில் ரூ. 27 மில்லியன் மட்டுமே
பயன்படுத்தப்பட்டது என்றும், நிதி முறையாகப் பயன்படுத்தப்படாததால் நிலைமை
மோசமடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
நிதி
இது தொடர்ந்தால், தெரு நாய்களின் எண்ணிக்கை விரைவில் மக்கள் தொகையை
எட்டக்கூடும் என்று எச்சரித்த அவர், வெறும் நாய்கள் காப்பகங்களை அமைப்பது
இந்தப் பிரச்சினையைத் தீர்க்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக தேசிய நாய் பதிவுத்
திட்டத்தை தொடங்க வேண்டும் என்றும், விசர்நாய்கடி நோய்க்கு எதிராக
மக்களுக்குத் தடுப்பூசி போட ரூ. 600 மில்லியனுக்கும் அதிகமான நிதி தேவைப்படும்
என்றும் அவர் வலியுறுத்தினார்.
