இனத்தையும், மொழியையும் நேசிக்கின்ற அடுத்த தலைமுறையின் உருவாக்கம் தான், தனது
இருப்புக்காகப் போராடும் ஒரு இனத்தின் எதிர்கால நம்பிக்கையாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அத்தகையோர் தலைமுறையின் தோற்றத்திற்கு வழிகோலும் சமூகக் கடப்பாட்டைக் கொண்ட
பாடசாலைகள், கல்வி அடைவுமட்டத்திற்கான தளங்களாக மட்டுமல்லாது, பிள்ளைகளின்
ஆளுமை விருத்திக்கும், தலைமைத்துவ வாண்மைக்குமான களங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறீதரன் எம்.பி
சிறீதரன் எம்.பியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 2.1மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியின் பிரதான மண்டபத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், கல்லூரியின் முதல்வர் அரசரட்ணம் பங்கையற்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
