மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை
ஒன்றில் கல்விப் பொதுத்தர சாதாரண தரத்திற்கும் தோற்றும் சுமார்
20 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கு
விண்ணப்பிக்காமலிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த கல்வி வலயத்திற்குப்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும்
ஆசிரியரின் பொறுப்பில் இம்முறை கல்விப் பொதுத்தர சாதாரண தரத்திற்கும் தோற்றும்
மாணவர்களுக்காக தேசிய அடையான அட்டைக்கு விண்ணப்பிக்கும் பொறுப்பு
வழங்கப்பட்டிருந்துள்ளது.
பரீட்சை
எனினும் மாணர்கள் நேற்றைய தினம் (17.03.2025) பரீட்சைக்குத்
தோற்றுகின்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலும் அப்பாடசாலையில் கல்வி
பயிலும் சுமார் 20 இற்கு மேற்பட்ட மாணவர்களின் கரங்களுக்கு தேசிய அடையாள
அட்டை கிடைத்திருக்கவில்லை.
இதனையறித்த பெற்றோர் குறித்த பாடசாலை அதிபரையும்,
ஏனைய ஆசிரியர்களையும் தொடர்பு கொண்டதற்கிணங்க வெள்ளிக்கிழமையன்று குறித்த
ஆசிரியரின் வீடு தேடிச் சென்ற அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் பிறிதொரு
ஆசிரியர் விடயங்களைக் கேடறிந்தபோது அவர் சுமார் 20 இற்கு மேற்பட்ட
மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் ஆவணங்களை அவரது
வீட்டிலேயே வைத்திருந்ததாக அதிர்சித் தகவல் வெளிவந்துள்ளது.
தற்காலிக அடையாள அட்டை
துரிதமாகச் செயற்பட்ட மற்றைய ஆசிரியர் அவரிடமிருந்த அனைத்து ஆவணங்களையும்
பெற்றுக் கொண்டு அன்றையதினமே மாணவர்களுக்குரிய தற்காலிக அடையாள அட்டையை
பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததற்கமைய மாணவர்கள்
பரீட்சைக்குத் தோற்றியதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
எனினும் பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் நிரந்தர அடையாள அட்டைக்கு
விண்ணப்பிக்க வேண்டியுள்ளது எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு செயற்படும் ஆசிரியர்கள் மத்தியில்
இவ்வாறான ஆசிரியருக்கு கல்வித் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
