பிரித்தானிய(UK) நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் என்பவர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.இதற்கமைய
2019 ல் அங்கு தேர்தல் நடைபெற்று ஆட்சியில் கன்சர்வேட்டிவ் கட்சி(Conservative party) உள்ளதுடன் பிரதமராக ரிஷி சுனக் உள்ளார்.
இந்த கட்சியின் நிர்வாக காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவு பெற உள்ளது.
இதன் காரணமாக பொதுத் தேர்தலானது, 2024 ஆம் ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
பொதுத்தேர்தல்
ஆனால், பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் ஜூலை மாதம் 4 ஆம் திகதியே நடத்தப்படும் என பிரதமர் ரிஷி சுனக் (Rishi sunak)தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை பொறுத்தவரை முக்கிய கட்சிகளாக கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளிடையே தான் போட்டி நடைபெறும்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் உள்ளதுடன் தொழிலாளர் கட்சியின் தலைவராக சர் கியர் ஸ்டார்மர் உள்ளார்.
மொத்தம் உள்ள 650 தொகுதிகள் கொண்ட நாடாளுமன்றத்திற்கு வரும் ஜூலை 4ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
களமிறங்கும் தமிழர்
பிரித்தானியாவை பொறுத்தவரையில் இதில் 326 தொகுதிகளில் வெல்லும் கட்சி ஆட்சியமைக்கும். அதேவேளை எந்த கட்சியும் 326 இடங்களில் வெற்றிப்பெறவில்லை என்றால், தொங்கு நாடாளுமன்ற நடைமுறை பின்பற்றப்படுவது வழக்கமாகும்.
அதன்படி, பிரதமர் பதவியில் நீடிக்கும் நபருக்கே முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர் மற்ற கட்சிகளுடன் பேசி கூட்டணி ஆட்சியை அமைக்க முயற்சிக்கலாம். அவரால் முடியவில்லை என்றால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படும்.
அவர்கள் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கலாம்.
இந்நிலையில், பிரித்தானியாவின்
பிரிட்டனின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் சென்னை கொளத்தூரை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் என்பவர் போட்டியிடுகின்றார்.
தீவிர பிரச்சாரம்
இங்கு தமிழர்கள் அதிகம் பேர் வசிப்பதால்
அவர்களின் ஆதரவுடன் வெற்றி பெற விரும்பும் ஆனந்த் குமார் சுந்தர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
பிரிட்டனின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் ஆனந்த் குமார் சுந்தர் மட்டுமல்லாது ஸ்டீபன் டிம்ஸ் (தொழிலாளர் கட்சி)
மரியா ஹிக்சன் (கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிஸ்ட் கட்சி)
ஹிலாரி விக்டோரியா பிரிஃபா (லிபரல் டெமாக்ரட்டீஸ் கட்சி)
தாஹிர் மிர்சா (சுயேச்சை)
டேனியல் சார்லஸ் ஆக்ஸ்லி (சீர்திருத்த யுகே)
ரோஸி பியர்ஸ் (பசுமைக் கட்சி)
சதீஷ் மோகன் ராமதாஸ் (சுயேச்சை)
ஆனந்த் குமார் சுந்தர் (சுயேச்சை)
என மொத்தம் 7 பேர் போட்டியிடுகிறார்கள்.
அனைத்து வேட்பாளர்களும் தற்போது தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.