கிளிநொச்சி(Kilinochchi) மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வனை கடத்த முயற்சித்த நிலையில் அவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையானது தொடரும் அச்சுறுத்தல் நிலையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது என வடமராட்சி ஊடக இல்லம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் இதனை வடமராட்சி ஊடக இல்லம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ் ஊடகத்துறை
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சமூக மட்டத்திலும் நிர்வாக கட்டமைப்புகளிலும் இடம்பெற்று வரும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகள், முறைகேடுகளை பகிரங்கமாக ஊடக அறிக்கையிடல் மூலம் வெளிப்படுத்தி வரும் மு.தமிழ்ச்செல்வன் மீது கிளிநொச்சி நகரில் ஏ-9 நெடுஞ்சாலையில் வைத்து பட்டப்பகலில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் மற்றும் தாக்குதல் முயற்சி சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
போர் காலத்திலும் அதன் பின்னரும் தமிழ் ஊடகத்துறை ஆயுத முனையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டும், அதன்காரணமாக பல ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டும், கடத்தப்பட்டு சடலங்களாக வீசப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும் வந்துள்ளனர்.
ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னரான காலத்தில் தமிழர் தாயகத்தில் வன்முறை கலாசாரம் திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டு வருவதும் அதன் பின்னணியில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் சமூகவிரோத செயற்பாடுகள் சமூகமயப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆட்சி அதிகாரத்தில் உள்ளோரால் இவை கண்டும் காணாமல் விடப்படுகின்றமையும் அதற்கு காரணமாணவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படாது பாதுகாக்கப்பட்டு வருகின்றமையும் ஆட்சிகள் மாறினாலும் மாற்றமேதுமின்றி தொடர்கின்றமையானது அந்நிலையை மேலும் ஊக்குவிப்பதாகவே இருந்து வருகின்றமை எந்நிலையிலும் மறுக்கவே முடியாத பேருண்மையாகும்.
பாரிய அச்சுறுத்தல்
இவ்வாறான நிலையில், முன்னைய காலங்களில் ஆயுத முனைகளால் பேச முடியாதவற்றை தற்காலத்தில் வன்முறைச் சம்வங்கள் மூலமாக தமிழ் ஊடகத்துறையை மௌனிக்கச் செய்யும் உச்சபட்ட அடக்குமுறை செயற்பாடுகள் தீவிரம் பெற்றுள்ளன.
இவ்வாறான நிலையில் நிகழ்ந்துள்ள இத்தாக்குதலானாது ஊடக சுதந்திரத்தின் மீதான பாரிய அச்சுறுத்தலாகும்.
இச் செயற்பாட்டினை தனியே குறித்த ஒரு ஊடகவியலாளருக்கு எதிரான உரிமை மீறலாக கடந்து சென்றுவிட முடியாது.
அந்தவகையில், சமூக விரோத செயற்பாடுகளை துணிச்சலுடன் வெளிச்சம் போட்டு காட்டிவரும் சுயாதீன ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் சம்பவத்தை யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வன்மையாக கண்டிக்கின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க அவர்கள் தலைமையிலான புதிய அரசாங்கத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றமை ஏமாற்றமே.
யாழ் வடமராட்சி ஊடக இல்லம்
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டு இருவர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் காரணமானது விடயத்தை திசைதிருப்பி உண்மை குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் திட்டமிட்டு கூறப்பட்டிருப்பதாக, தாக்குதல் சம்பவத்தின் போது அவர்கள் வெளிப்படுத்திய வார்த்தைப் பிரயோகங்களின் பின்னணியில் ஆணித்தரமாக நம்பப்படுகின்ற நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எமக்கும் பலத்த ஐயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே குறித்த கைது சம்பவத்தோடு மட்டுப்படுத்தப்பட்டதாக விசாரணை நடவடிக்கைகள் முற்றுப்பெறாது பின்னிருந்து செயற்படுத்திய உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நீதி நிலைநாட்டப்படுவதனை உறுதிசெய்யும் வகையிலானதாக முன்னெடுக்கப்பட வழிவகை செய்ய வேண்டும்.
தமிழ் ஊடகத்துறை மீது காலத்திற்கு காலம் வெவ்வேறு வடிவங்களில் தொடரும் அச்சுறுத்தல் நிலையினை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கும் அதற்கு காரணமானவர்களை பாரபட்சமின்றி சட்டத்தின் முன்நிறுத்தி உரிய நீதியினை வழங்குவதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்தருணத்தில் யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தி நிற்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.