Home இலங்கை சமூகம் தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பத்து கோடி ரூபா அபராதம்

தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பத்து கோடி ரூபா அபராதம்

0

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 நாட்டுப்படகு கடற்றொழிலாளர்கள், 10
விசைப் படகு கடற்றொழிலாளர்கள் என 45 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு மொத்தம் பத்துக் கோடி ரூபா
அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற
அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்குச் சொந்தமான நான்கு
நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 கடற்றொழிலாளர்களை இலங்கைக் கடற்படையினர்
கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதியன்று கைது செய்தனர்.

35 கடற்றொழிலாளர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை
பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
செய்யப்பட்டு புத்தளம் மாவட்டம் வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

கடற்றொழிலாளர்களின் காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 35 கடற்றொழிலாளர்களும் புத்தளம்
நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.

இதன்போது வழக்கை விசாரித்த நீதிபதி விமலரத்னா,
நீளமான ஒரு நாட்டுப் படகிலிருந்த 12 கடற்றொழிலாளர்களுக்கு தலா ரூ. 35 இலட்சம்
அபராதமும், மற்ற மூன்று நாட்டுப் படகிலிருந்த 23 கடற்றொழிலாளர்களுக்கு தலா ரூ.10
இலட்சம் அபராதமும் விதித்தார்.

 

 

மூன்று மாதம் சிறைத்தண்டனை 

அபராதத்தைக் கட்டத் தவறினால் மூன்று மாதம்
சிறைத் தண்டனை விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்திலிருந்து அந்தோனி தேன் டெனிலா
என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி விசைப்படகில் கடலுக்குச் சென்ற 10 கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு புத்தளத்தில் உள்ள வாரியாபொல
சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த 10 விசைப்படகு கடற்றொழிலாளர்களுக்கு தலா ரூ. 35 இலட்சம் அபராதம்
விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து
புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

45 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு ரூ.10 கோடி (இந்திய மதிப்பில் ரூ 2.76 கோடி)
அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

35 தமிழக நாட்டுப் படகு கடற்றொழிலாளர்கள் கொழும்பில்
உள்ள மிரிஹான முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 10 விசைப் படகு கடற்றொழிலாளர்கள் புத்தளம் வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.

NO COMMENTS

Exit mobile version