Home இலங்கை சமூகம் தமிழராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபி வளாகத்தின் பரிதாப நிலை

தமிழராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபி வளாகத்தின் பரிதாப நிலை

0

யாழ்ப்பாணம் – வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள தமிழராய்ச்சி படுகொலை
நினைவேந்தல் தூபி வளாகமானது பராமரிப்பு இன்றி பரிதாபமான நிலையில்
காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

குறித்த தூபி அமைந்துள்ள வளாகத்தில் புற்கள் அதிகளவாக வளர்ந்து
காட்சியளிக்கிறது.

இந்த தூபி அமைந்துள்ள பகுதியானது புனிதத்துவம் மிக்க ஒரு
இடமாக கருதப்படுகிறது. இந்த இடத்தில் நினைவேந்தல் செய்வதற்கு மாத்திரம் அந்தக் காலப் பகுதிகளில்
கட்சிகளை சேர்ந்தவர்கள் வந்து செல்வார்கள். 

தமிழாராய்ச்சி மாநாடு 

ஆனால், அந்த இடமானது மற்றைய
நாட்களில் எவ்வாறு இருக்கிறது என்பதை யாரும் கருத்தில் கொள்வதில்லை.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ்.
வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில்
ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில்
நடத்தவிடாமல் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, பொலிஸாரை
அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.

ஒன்பது தமிழர்கள் படுகொலை

இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்கள் மனதில்
நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது. அதன் வெளிப்பாடாகவே
இந்த நினைவேந்தல் தூபியானது அமைக்கப்பெற்றது.

ஆகையால் குறித்த தூபி அமைந்துள்ள பகுதியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
ஒரு இடமாக காணப்படுகிறது.

மேலும், வெளிநாட்டவர்களும் சுற்றுலாப்பயணிகளும்
வருகை தரும் சந்தர்ப்பங்களும் உள்ளன. இந்நிலையில் அவர்கள் அப்பகுதிக்கு
வரும்போது இவ்வாறான நிலையில் காணப்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழ்
சமூகத்துக்கும் ஒரு இழுக்காகவே காணப்படும்.

எனவே, அந்த பகுதியை சுத்தம் செய்து, அதன் புனிதத் தன்மையை பேண வேண்டும்
என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் காணப்படுவதாக கோரப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version