Home இலங்கை அரசியல் அநுர அரசாங்கத்திற்கு தமிழரசுக் கட்சி விடுத்துள்ள எச்சரிக்கை

அநுர அரசாங்கத்திற்கு தமிழரசுக் கட்சி விடுத்துள்ள எச்சரிக்கை

0

மட்டக்களப்பு – புல்லுமலை பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர்
தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கினால் அநுர அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம்
வெடிக்கும் என தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று உப தவிசாளர் உறுப்பினர்கள்
தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன், ஏறாவூர் பற்று பிரதேச சபை உபதவிசாளர் சர்வானந்தன் உட்பட உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

அதன்படி, “குடிநீர் என்பது ஒரு விற்பனை பொருள் அல்ல அது இறைவனால் மனிதர்களின்,
உயிரினங்களின் தாகத்தை போக்குவதற்காக படைக்கப்பட்ட இயற்கை வளம் அதனை உறிஞ்சி
விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்குவதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுத்த
வேண்டும்.

மக்கள் போராட்டம்.. 

மட்டக்களப்பு – புல்லுமலை பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு காத்தான்குடி நகர சபை
தவிசாளர் ஊடாக மாகா தண்ணீர் தொழிற்சாலை என்ற பெயரில் நிலத்தடி நீரை உறிஞ்சி
விற்கும் தண்ணீர் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன.

அதன்போது
அதனை கிராம மக்கள் உட்பட மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகள், அரசியல்
தலைவர்கள் என அனைவரும் எதிர்த்து போராட்டம் நடத்தினோம்.

அப்போது இருந்த
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசும், அதிகாரிகளும்
மக்கள் போராட்டத்திற்கு மதிப்பளித்து குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி
வழங்காமல் கைவிட்டனர்.

குறித்து தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க கூடாது என ஏறாவூர் பற்று பிரதேச
சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்கும் போது தற்போது மீண்டும் அதே தண்ணீர் தொழிற்சாலைக்கு வேறு ஒரு
வர்த்தகரின் பெயரில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஏறாவூர் பற்று அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த வர்த்தகரால்
புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி கோரப்பட்டபோது தண்ணீர் குறித்த
ஆய்வு அறிக்கை கிடைத்தவுடன் அனுமதி வழங்கலாம் என அபிவிருத்தி குழு தலைவரும்
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரவு தெரிவித்துள்ளார். 

 தண்ணீர் தொழிற்சாலை

இலங்கையில் இதுவரை 150 தண்ணீர் தொழிற்சாலைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதில் ஒரு சில தொழிற்சாலைகளை தவிர அனைத்து தொழிற்சாலைகளும் தண்ணீர் மிக மிக
அதிகமாக உள்ள கம்பஹா போன்ற மாவட்டங்களிலே அமைந்துள்ளது.

எம்மை பொறுத்தமட்டில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல இலங்கை எங்குமே நிலத்தடி நீரை உறிஞ்சி
விற்கும் தண்ணீர் தொழிற்சாலைகள் அமைக்க அரசு அனுமதி கொடுக்க கூடாது.

தண்ணீர் ஒரு விற்பனை பொருளாக மாறுமாக இருந்தால் மனிதனால் தண்ணீரை பணம்
கொடுத்து வாங்க முடியும் ஆனால் ஏனை உயிரினங்கள் நீர் இன்றி அழிந்து போகும்,
விவசாயம், கால்நடை, குளங்கள் என அனைத்தும் முழுமையாக பாதிக்கப்பட்டு குறித்த
பிரதேசமே பாலைவனமாக மாறும் நிலை ஏற்படும்.

எனவே ஒட்டுமொத்த கிராம மக்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பாதிப்பை
ஏற்படுத்தும் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அநுர அரசு ஒருபோதும் அனுமதி
வழங்க கூடாது.

மீறி வழங்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய மக்கள் போராட்டம் வெடிக்கும்
அவ்வாறான போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சி முன்னின்று ஆதரவு வழங்கும்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version