Home இலங்கை சமூகம் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி திருமலையில் வெடித்த போராட்டம்

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி திருமலையில் வெடித்த போராட்டம்

0

திருகோணமலை (Trincomalee) – மூதூர் (Mutur) கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் மற்றும் வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்றைய தினம் (19.06.2025) பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் பெற்றோர்,பழைய மாணவர்கள் இணைந்து இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டம்

கணிதம்,சமயம்,தகவல் தொழில்நுட்பம்,சிங்களம்,வர்த்தகம் உள்ளிட்ட பல முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும்,பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு வளப்பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் கணித பாட ஆசிரியரை உடனடியாக நியமித்துத் தாருங்கள் ,ஆசிரியரின்றி கற்பது எப்படி,சிங்கள பாட ஆசிரியரை உடனே நியமியுங்கள்,ஏன் எம்மை கல்வியில் புறக்கணிப்பு செய்கின்றீர்கள்,விளையாட்டு
பயிற்றுவிப்பாளரை உடனே நியமியுங்கள்,கல்வி நிர்வாகமே எங்கள் மாணவர்களின் எதிர்காலம் உங்கள் கையில்,

வர்த்தக பாட ஆசிரியரை நியமித்து தாருங்கள் ,எங்கள் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தியுங்கள் உள்ளிட்ட பல்வேறு
வாசகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரியர் பற்றாக்குறை

இதனையடுத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஹாபிஸ் மரைக்காயர் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரோடு கலந்துரையாடியுள்ளார். 

அத்தோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரினால் தமது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளரிடம்
கையளிக்கப்பட்டது.

இது விடயமாக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தெரிவிப்பதாக தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மூதூர் நிருபர் : எம்.என்.எம்.புஹாரி

NO COMMENTS

Exit mobile version