மட்டக்களப்பு செங்கலடி பொதுச் சந்தையில் உள்ள கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்ட நிலையில் இன்றுடன் ஏழு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் சந்தை வீதியில் உள்ள வீதி விளக்குகளை போடாது தவிசாளர் இழுத்தடிப்பு செய்து வருவதாக வர்த்தகர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
மட்டக்களப்பு செங்கலடி பொதுச் சந்தையில் நள்ளிரவில் கடைகள் உடைக்கப்பட்டு பணம் உட்பட பொருட்கள் திருடப்பட்டு ஏழு நாட்கள் நிறைவடைந்துள்ள இதுவரை பொலீசார் திருடனை கைது செய்யவில்லை.
கடந்த (20/07/2025) இரவு 11.40 மணியளவில் செங்கலடி பொதுச் சந்தைக்குள் நுழைந்த திருடர்கள் மூன்று வியாபார நிலையங்களை உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றிருந்தனர்.
சிசிரீவியில் பதிவாகியிருந்த காட்சிகள்
திருட்டில் ஈடுபடும் திருடன் ஒருவனின் காட்சிகள் வியாபார நிலையங்களில் உள்ள சிசிரீவி கமராக்களில் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் திருட்டு நடந்து ஏழு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் திருடனை காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை.
இதேவேளை குறித்த திருட்டுக்கு காரணமான இரவு நேர காவலாளி இல்லாமை மற்றும் வீதி விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்த நிலையில் காணப்படும் சந்தை பிரதேசம் குறித்து ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.
சுமார் ஒரு இலட்சம் மக்கள் சனத்தொகையை கொண்ட ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் இருக்கும் செங்கலடி பொதுச் சந்தையே பிரதானமானது.
பதுளை வீதி – திருகோணமலை, கொழும்பு வீதிகள் சந்திக்கும் செங்கலடி பொதுச் சந்தையானது மிகவும் இருள் சூழ்ந்த பகுதியாக காணப்படுகிறது.
இரவு நேர காவலாளி
இதன் காரணமாக திருடர்களின் நடமாட்டம், போதை வஸ்து பாவிப்பவர்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களின் நடமாட்டம் என்பன அதிகரித்து காணப்படுகிறது.
இது குறித்து செங்கலடி வர்த்தகர்கள் பல தடவைகள் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தும் தவிசாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என செங்கலடி வர்த்தகர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
இரவு நேர காவலாளி எங்கே போனார்?
இதேவேளை கடந்த வாரம் திருட்டு நடந்த இரவு சுமார் 11.40 மணியளவில் இரும்பு அளவாங்கால் அடித்து மூன்று கடைகள் உடைக்கப்படும் போது பிரதேச சபையினால் நியமிக்கப்பட்ட இரண்டு காவலாளிகளும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது?
இரவு நேர காவலாளிகள் சந்தை பகுதியில் இருப்பதில்லை என்றும் அப்படி இருந்தாலும் அவர்கள் இரவில் நித்திரையில் இருப்பதால் தான் இவ்வாறான திருட்டுகள் இடம்பெறுவதாகவும், குறித்த காவலாளிகள் சம்பந்தமாக தவிசாளர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
