நாடு முழுவதும் பல மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகளில் திரிபோஷா
உணவிற்கான கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில்
உரிமைகள் வைத்தியர் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்ஜீவ
தெரிவித்துள்ளார்.
திரிபோஷா வழங்கல்
இந்த பற்றாக்குறை காரணமாக, தற்போது மூன்று வயதுக்கு மேற்பட்ட மிகக் கடுமையான
போஷாக்குக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, அத்துடன் இரும்புச் சத்து குறைபாடுள்ள
தாய்மார்கள் மற்றும் குறைந்த எடையுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே
திரிபோஷா வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பல ஆண்டுகளாக திரிபோஷா
வழங்கப்படவில்லை என்றும், விநியோகத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதாக
அறிவிக்கப்பட்ட போதிலும், அதை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
திரிபோஷா நிறுவனம் மாற்றம்
இந்த சூழலில், இதற்கு முன்னர் சுகாதார அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த
திரிபோஷா நிறுவனம், அண்மையில் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பின் மூலம் வர்த்தக
அமைச்சிற்கு மாற்றப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
நிறுவனத்தை விற்க சதி நடப்பதாகச் சுகாதாரத் தொழில்கள் சங்கம்
குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், திரிபோஷா நிறுவனத்தை சுகாதார அமைச்சிலிருந்து
நீக்கி வர்த்தக அமைச்சின் கீழ் கொண்டு வந்தது ஏன் என்பதற்கான அடிப்படைகளை
அரசாங்கம் விளக்க வேண்டும் என வைத்தியர் சமல் சஞ்ஜீவ வலியுறுத்தியுள்ளார்.
