செம்மணி விடயம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த, குறித்த
மயானத்தின் நிர்வாகசபை உறுப்பினரான கிருபாகரன் தனக்கு அச்சுறுத்தல்
இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(8) செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
மர்ம வாகனம்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மர்ம வாகனம் செம்மணியை நோட்டமிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அந்த
செய்திகள் முற்றும் முழுதாக உண்மை.
அந்த மர்ம வாகனமானது எனது வீட்டு
அருகாமையிலும் வந்திருந்தது.வழக்காளியான என்னை அச்சுறுத்துவதே இதன்
நோக்கமாகும்.
வழக்கு தொடர்பாக 1995 – 2000 வரையான காலப்பகுதியில் இங்கே கடுமையான செய்தி
தணிக்கைகள் இருந்த நிலையில் நீதிமன்ற செயற்பாடுகளும் பொலிஸ் செயல்பாடுகளும்
இல்லாது நிர்வாக ரீதியான செயல்பாடுகள் அனைத்தும் இராணுவத்தின் வசம் இருந்ததால்
மக்கள் தாமாக முன்வந்து எந்த சாட்சியங்களையும் பதியவில்லை.
அச்சுறுத்தல்
இவ்வாறான சூழ்நிலையில் நான் இந்த விடயத்தை இன்று கையில் எடுத்ததால் அரியாலை
பகுதியில் இருக்கின்ற பாதிக்கப்பட்ட மக்கள் தமது சாட்சியங்களை எனக்கு தந்து
கொண்டிருக்கின்ற நிலையிலே இந்த சாட்சியங்களை அச்சுறுத்துகின்ற அல்லது இந்த
சாட்சியங்கள் சாட்சி கூற வருவதை தடுப்பதாக இந்த செயல்பாடு காணப்படுகிறது.
அதாவது 1998ஆம் ஆண்டு முதலாவது குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச வழங்கிய
புதைகுழிகள் தொடர்பான அறிக்கையிலே, பதினைந்தாவது புதைக்குழியாக
குறிப்பிடப்பட்ட ஏ-9 வீதி, பொன்னம்பலம் சந்திக்கு அருகாமையில் இருக்கின்ற
இராணுவ முகாமுக்கு அருகில் இருக்கின்ற கிணற்றிலிருந்து அகழ்வு இடம் பெற்றது.
அதற்குப் பின்னால் இப்போதும் இராணுவ முகாம் இருக்கின்றது. அந்த இராணுவ முகாம்
அமைந்துள்ள தனியார் காணிக்குள் தான் அந்த மர்ம வாகனம் சென்றது.
பல உண்மைகள்
இதனை நான்
அவதானித்தேன்.
நான் வசிக்கின்ற வீட்டுக்கான வீதியானது எனது வீட்டுடனேயே முடிவடைகின்றது.
ஆகையால் வேறொரு வாகனம் அந்த ஒழுங்கைக்கு வருவதற்கான அவசியம் இல்லை. இரண்டு
வாகனங்கள் இவ்வாறு வந்திருந்தது. இதனை நேரில் கண்ட ஒருவர் எனக்கு
தெரிவித்திருக்கின்றார்.
ஆகவே எவ்வாறான அச்சுறுத்தல்கள், எவ்வாறான செயற்பாடுகள் நடந்தாலும் இந்த
வழக்கில் நான் உறுதியாக இருக்கின்றேன். மக்களும் உறுதியாக தமது சாட்சியங்களை
தருகின்றார்கள்.
இதன்மூலம் பல உண்மைகள் வெளிவருகின்றன. அதனை நாங்கள் நீதிமன்ற
செயற்பாட்டுக்கு சமர்ப்பித்து தொடர்ந்து தமிழ் மக்களுக்கான நீதிக்கான அனைத்து
செயல்பாடுகளையும் முன்னெடுப்பேன் என்றார்.
