யாழ்ப்பாணத்தில்(jaffna) இன்றையதினம் காவல்துறையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம்
சாவகச்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை பகுதியைச் சேர்ந்த 24
வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பல நாள் திருடன் சிக்கினான்
நெல்லியடியில் கடை ஒன்றினை உடைத்து 6 இலட்சம் ரூபா காசு, கமரா சேமிப்பகம்
என்பவற்றை திருடியமை, யாழில் கருவாட்டுக்கடை ஒன்றினை உடைத்து அங்கு திருடியமை,
சாவகச்சேரியில் தொலைபேசி கடை ஒன்றினை உடைத்து 96 ஆயிரம் ரூபா பெறுமதியான
பொருட்கள் மற்றும் 2 கைபேசிகளை குறித்த சந்தேகநபர் திருடியமை விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.
இதன்போது திருடப்பட்ட பல பொருட்களும் மீட்கப்பட்டன.
விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சாவுடன் இருவர் கைது
இதேவேளை இன்றையதினம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து
கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் தனபாலவின் கீழ் இயங்கும்
காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
காரைநகர் பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 34 வயதுடைய இருவரே கஞ்சாவை எடுத்து
சென்றபோது பொன்னாலை பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 12 கிலோ 730 கிராம் எடையுடைய கஞ்சா மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில்
கையளிக்கப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
