வவுனியாவில் சீனிப் பாணியை தயாரித்து தேன் எனக் கூறி விற்பனை செய்து வந்த
மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான
சீனிப்பாணியும் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
வவுனியா பொதுச் சுகாதார பிரிவினருக்கு கிடைத்த
இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்பார்வை சுகாதார பரிசோதகரின்
வழிகாட்டலில், நெளுக்குளம் பொது சுகாதார பரிசோதகர் சிவரஞ்சன் தலைமையிலான அணியினர்
மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து ஊர்மிளாக்கோட்டம் பகுதியிலுள்ள
வீடுகளில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இதன்போது, குறித்த இடங்களில் விற்பனைக்கு
தயாராக வைக்கப்பட்டிருந்த 200 போத்தல் சீனிப் பாணி சுகாதாரப் பிரிவினரால்
கைப்பற்றப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, சீனிப்பாணியை தயாரித்து அதற்குள் சிறிதளவு தேனை மாத்திரம் கலந்து ஏ9
வீதியின் முறிகண்டிப் பகுதியிலும், நெடுங்கேணி பகுதிகளிலும் விற்பனை
செய்யப்படுகிறது.
அத்துடன் இங்கிருந்து அனுராதபுரம், மதவாச்சி ஆகிய
பகுதிகளுக்கும் அவை கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றது. எனவே பொதுமக்கள் தேனை கொள்வனவு
செய்யும் போது சரியான முறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
