Home இலங்கை குற்றம் வவுனியாவில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி திருட்டு: ஒருவர் கைது

வவுனியாவில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி திருட்டு: ஒருவர் கைது

0

வவுனியாவில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கர வண்டிகளை திருடி விற்பனை செய்த
நிலையில், இரு முச்சககர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரப் பகுதியில் இருந்து சிவப்பு நிற முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு
அமர்த்திச் சென்று, முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை
கீழே விழுத்தி விட்டு, குறித்த முச்சக்கர வண்டியை கடத்திச் சென்ற சம்பவம்
ஒன்று பதிவாகியிருந்தது.

அதுபோன்று, வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இருந்து உளுக்குளம் நோக்கி
முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்திச் சென்று சாரதிக்கு மயக்க மருத்து
கொடுத்து முச்சக்கர வண்டி ஒன்று கடத்திச் செல்லப்பட்ட சம்பவமும்
பதிவாகியிருந்தது.  

ஒருவர் கைது

வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த சம்பவத்துடன்
தொடர்புடைய ஒருவர் கைது செய்யபபட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்
வவுனியா நகரப் பகுதியில் கடத்தப்பட்ட முச்சக்கர வணடிக்கு நீல நிற
வர்ண்ப்பூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றப்பட்டு கெக்கிராவ பகுதியில் நின்ற
நிலையில் மீட்கப்பட்டது.

அத்துடன், வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இருந்து உளுக்குளம் சென்ற போது
முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு கடத்திச் செல்லப்பட்ட
பச்சை நிற முச்சக்கர வண்டி 9 இலட்சம் ரூபாய்க்கு இலக்கத்தகடு மாற்றி விற்பனை
செய்யப்பட்ட நிலையில், சாய்ந்தமருது பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

சாரதிகளுக்கு எச்சரிக்கை

குறித்த இரண்டு சம்பவங்கள் தொடர்பில் கெக்கிராவ பகுதியில் வசித்து வரும் 37 வயது
நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வருவோர் தரும் குடிபானங்களை அருந்தாது
விழிப்புடன் செயற்படுமாறும் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார்
மேலும் கூறியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version