தெமட்டகொடை – ஸ்ரீ தம்ம மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது சுவர் இடிந்து வீழ்ந்தமையால் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (29) இரவு மழையுடன் கூடிய கடுமையான காற்று நிலவிய சூழலில் குறித்த வீட்டிற்கு அருகிலுள்ள ஆடைத் தொழிற்சாலையின் மேல் மாடியில் இருந்த சுவர் பகுதி ஒன்று இடிந்து விழுந்துள்ளதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக, நேற்று (29.05.2025) மாலை முதல் இலங்கையின் பல பகுதிகளில் கடுமையான மழைவீழ்ச்சியும், பலத்த காற்று நிலையும் பதிவாகியுள்ளது.
கடுமையான பாதிப்பு
இதன் காரணமாக, தற்போது 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் (Disaster Management Centre) தெரிவித்துள்ளது.
இதன்படி, 9 மாவட்டங்களில் மழை மற்றும் காற்று நிலைகளால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் 365 வீடுகளுக்கு பகுதியளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு (Colombo) மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காற்று நிலையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதனால் பல வீதிகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
