நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியால் இலங்கையில் கட்டிடங்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்கள், விவசாயம் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட பௌதீக சேதம் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
உலக வங்கி குழுவால் வெளியிடப்பட்ட உலகளாவிய விரைவான பேரிடர் சேத மதிப்பீட்டு அறிக்கையின்படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொகையானது, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% க்கு சமம் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய மாகாணம்
அறிக்கையின்படி, மத்திய மாகாணம் அதிக சேதத்தை சந்தித்துள்ளதாகவும் அது 689 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வீதிகள், பாலங்கள், தொடருந்து மற்றும் நீர் வழங்கல் அமைப்புகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் 1.735 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது மொத்த சேதத்தில் 42% ஆகும்.
உலக வங்கியின் கூற்றுப்படி, டிட்வா பேரழிவால் குடியிருப்பு கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதம் 985 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
விவசாயத் துறை சேதம்
இதற்கிடையில், அரிசி, காய்கறிகள், பிற வணிக பயிர்கள், கால்நடைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் 814 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகள், பாடசாலைகள், வணிக வளாகங்கள், பெரிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளிட்ட குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதம் 562 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
