கொழும்பில் (Colombo) உள்ள அமெரிக்க தூதரகத்தினால் அறுகம்பை கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளுக்கு நேற்றைய தினம் விடுக்கப்பட்டு எச்சரிக்கையானது இலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை பல நாடுகள் புதுப்பித்துள்ளன.
இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் இலங்கைக்கு வருகை தருமாறு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக பாதுகாப்பு
நாட்டிலுள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சும் எடுத்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக நாட்டின் அழகை கண்டு ரசிக்கலாம் எனவும் அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் போது அதிக பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய வெளியிட்ட விசேட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
விசேட தொலைபேசி இலக்கம்
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கான அடிப்படை நடவடிக்கையாக 1997 என்ற விசேட தொலைபேசி இலக்கம் நேற்றைய தினம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் தமது பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை தொடர்பில் இந்த இலக்கத்தின் ஊடாக காவல்துறைக்கு அறிவிக்க முடியும் தலைமையகம் தெரிவித்துள்ளது.