Courtesy: Sivaa Mayuri
கொழும்பில் (Colombo) பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி அமைப்புகளின் ஊடாக அடையாளம் காணப்பட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 4500இற்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துப் பிரிவின் சிசிரிவிகள் மூலம் கைப்பற்றப்பட்ட குற்றங்களின் காணொளி ஆதாரங்கள் மற்றும் வாகனங்களின் பதிவுகள் ஆகியன சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸ் நிலையங்களால், குற்றங்களுக்கான அபராதத் தாள்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
சாலை விதிகள்
மேலும், இந்த செயல்திட்டமானது, கடந்த ஜனவரி 22ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான சட்டம் கடந்த பெப்ரவரி முதலாம் திகதியே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிசிரிவி கருவிகள் மூலம் சாலை விதிகளை மீறுதல், போக்குவரத்து விளக்குகளை பின்பற்றாமை, தரிப்பிடங்களாக அறிவிக்கப்படாத பகுதிகளில் வாகனங்களை நிறுத்துதல் மற்றும் சிவப்பு விளக்கை மீறி வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அத்துடன், போலி இலக்கத் தகடுகளுடன் வாகனங்களை செலுத்தும் சில சம்பவங்களையும் இந்த செயல்திட்டத்தின் ஊடாக அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.