மத்திய ஆபிரிக்க(central africa) குடியரசின் தலைநகா் பாங்கியில் உள்ள ஓா் உயா்நிலைப் பாடசாலையில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தபோது மின்மாற்றி வெடித்ததில் பல மாணவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த உயர்நிலை பாடசாலையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி ஆண்டு பரீட்சைகள் தற்போது நடந்து வருகிறது.
திடீரென வெடித்து சிதறிய மின்மாற்றி
நேற்று பாடசாலையில் மாணவர்கள் அமர்ந்து பரீட்சை எழுதிக் கொண்டிருந்தபோது பாடசாலை அருகே இருந்த மின்மாற்றி திடீரென வெடித்து சிதறியது. இதில் பாடசாலை கட்டிடம் தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 29 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள்.
200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆபத்தான நிலையில்
மேலும் தீ விபத்து காரணமாக மாணவர்கள் அலறியடித்து ஓடியதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இந்த சோக சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ள அந்நாட்டு ஜனாதிபதி, 3 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
