Courtesy: uky(ஊகி)
முல்லைத்தீவு அளம்பிலில் உள்ள வீதி ஒன்றில் போக்குவரத்தை மேற்கொள்வோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முறையில் மரங்கள் இருப்பது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த மரங்களினால் வீதியில் உள்ள வடிகால்களும் சேதமடைந்துள்ளன.மாரி காலம் நெருங்கி வரும் நிலையில் மழை வெள்ளம் பாய்ந்தோடுவதில் இவை இடையூறுகளை ஏற்படுத்திவிடும்.
அச்சமின்றி அவ்வீதியில் பயணிப்பதில் இருக்கும் திருப்தி நிலையை இந்த பட்ட பனை மரத்தினால் பெற முடியவில்லை என அப்பாதையை பயன்படுத்தி வரும் பயணிகள் பலரும் தெரிவித்துள்ளனர்.
முறிந்து விழும் பனைமரம்
வருமுன் காத்தலே அறிவுடைமை.
வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்று மழைக்காலம் வடக்கில் ஆரம்பமாக உள்ள சூழலில் வீசக்கூடிய கடும் காற்றினால் முறிந்து விழும் நிலையில் உள்ள பனைமரம் இனம் காணப்பட்டுள்ளது.
அடிக்கடி ஏற்படும் தாழமுக்கம் மற்றும் சுழிக்காற்று , சூறாவளி போன்ற மழைக்கால அனர்த்தங்களை அதிகம் சந்திக்கும் பகுதியாக முல்லைத்தீவின் அளம்பில் பகுதி உள்ளது.
அளம்பில் சந்தியில் இருந்து தங்கபுரம் செல்லும் வீதியில் கிறிஸ்தவ தேவாலயத்தை அடுத்து வீதியில் வலது பக்கத்தில் இந்த பனைமரம் நிற்பது இனம் காணப்பட்டுள்ளது.
பனைமரத்தின் முனையரும்புப் பகுதி (வட்டு என அப்பகுதி மக்களால் விழிக்கப்படும்) இல்லாது உள்ள இந்த மரம் நீண்ட காலமாக இப்படியே இருந்து வருவதாக மரத்தின் அயலில் வசிக்கும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
முனை அரும்பு இல்லாத அந்தப் பனை மரத்தின் தண்டுப்பகுதி விரைவாக உக்கலடைந்து போகலாம்.அப்படி நிகழும் போது அது வீதியால் பயணிப்போரின் மீது சரிந்து விழும் ஒரு சூழலில் உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த பட்ட பனைமரத்தினை அடியுடன் அகற்றி விடுதலே வீதியால் பயணிப்போருக்கு ஏற்படும் அச்சத்தினை நீக்கப் பொருத்தமான முயற்சியாக அமையும்.
வெட்டிய மரத் துண்டுகள்
இதே வீதியில் அளம்பில் சந்திக்கு அருகாக வெட்டப்பட்ட மரத்துண்டுகள் வீதியில் ஓரங்களில் போடப்பட்டுள்ளன.
வெட்டப்பட்ட நாளில் இருந்து மரத்துண்டுகள் எடுத்தகற்றப்படாதது தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
வீதியில் பயணிக்கும் போது இந்த மரத்துண்டுகளால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பாதையினை பயன்படுத்தி வரும் மக்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
வீதியோரமாக நின்ற மரம் வீதிக்கு குறுக்காக பாறி விழுந்து பயணத்தடையை ஏற்படுத்தியிருந்தது.அத்தடையை அகற்றி போக்குவரத்தினை சீர்செய்யும் நோக்குடனேயே இந்த மரம் துண்டுகளாக வெட்டப்பட்டிருந்ததாக அதனருகிருக்கும் மக்களிடம் மேற்கொண்ட உரையாடலின் மூலம் அறிய முடிகிறது.
அவ்வாறு துண்டுகளாக்கப்பட்ட மரத்தின் பகுதிகள் நீண்ட நாட்களாகியும் வீதியின் அருகுகளில் இருந்து அகற்றப்படாதது பயணத்திற்கு ஆபத்தாக அமையும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
சிறிய சறுக்கல் அல்லது விபத்தை தடுக்கும் பொருட்டு நிகழும் விரைவான வீதி விலகல்களின் போது இந்த மரத்துண்டுகளால் பாரிய விபத்துச்சேதங்களை ஏற்படுத்தி விட முடியும் எனவும் சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
சீராக்கப்பட வேண்டும்
அளம்பில் சந்தியில் இருந்து ஆரம்பமாகும் இந்த வீதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு அருகிலேயே இந்த மரத்துண்டுகளால் வீதியில் விபத்தச்சம் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வடிகால்களும் பற்றைக்காடுகளாகவும் முறிந்த மரத்துண்டுகளாலும் நிரம்பியிருக்கின்றது.
மழைக்காலம் ஆரம்பமாகும் முன்னர் வீதியின் இரு பக்கங்களிலும் உள்ள விபத்துக்களை ஏற்படுத்தக் கூடியவற்றை அகற்ற நடவடிக்கைகள் தேவை.
வெள்ள அனர்த்தங்களை தவிர்க்கும் வகையிலும் அதனால் வீதிக்கு ஏற்படக்கூடிய சேதங்களை தவிர்த்து கொள்ளவும் வடிகால்களை சீராக்கி நீர் வழிந்தோடக்கூடியதாக சீராக்கப்பட வேண்டும்.
எனினும் அளம்பில் தங்கபுரம் வீதியில் உள்ள இவை தொடர்பில் கிராமிய அமைப்புக்களும் சரி பிரதேச சபைகளும் சரி அக்கறை கொண்டு செயற்படுவதாக தெரியவில்லை.
விபத்துக்களால் ஏற்படும் இழப்புக்களை தவிர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க உரிய தரப்புக்கள் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.