திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக்
கட்சியின் உறுப்பினர் வெள்ளத்தம்பி சுரேஷ்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று(24) மதியம் 2.00 மணிக்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம் பெற்ற
குறித்த தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த
வெள்ளத்தம்பி சுரேஷ்குமார் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின்
தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, தவிசாளர் தெரிவில் இருவர் போட்டியிட்டனர். இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வெள்ளத்தம்பி சுரேஷ்குமார் மற்றும் தேசிய மக்கள்
சக்தி கட்சியைச் சேர்ந்த திமுங்கு ஹேவாகே சஜி்த் சதுர லக்மால் ஆகியோர் போட்டியிட்டனர்.
திறந்த வாக்கெடுப்பு
இதில் திறந்த வாக்கெடுப்பின் மூலம் இலங்கைத் தமிழரசுக்
கட்சி சபையை கைப்பற்றியதுடன் வெள்ளத்தம்பி சுரேஷ்குமாருக்கு 16
உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
உப தவிசாளராக சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த கைலாயநாதன் வைரவநாதன் திறந்த
வாக்கெடுப்பின் மூலம் 8 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார்.
இன்றைய தவிசாளர் தெரிவில் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 20 உறுப்பினர் கலந்து
கொண்டனர்.
இவர்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 6, தேசிய மக்கள் சக்தி 4,
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3, ஐக்கிய மக்கள் சக்தி 2, அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ் 1, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1, சுயற்சைக் குழு 3 என இச்
சபையில் அங்கம் வகிக்கின்றனர்.
