நபர்கள் உயிரிழந்த பின்னர், உறவினர்களின் குடும்பங்களை அலைய வைக்கும்
விதத்தில் திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம் செயற்படுவதாக
பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விபத்துக்கள் மற்றும் யானைகளின் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள்
சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைகளுக்காக பிரேத பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு
தூர இடங்களிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு
வரப்படுகின்றன.
இருப்பினும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத குளிரூட்டி பழுதடைந்த
நிலையில் காணப்படுவதால் சடலத்தை பாதுகாக்கும் நோக்கில் கந்தளாய் வைத்தியசாலை
பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
குளிர்சாதன பெட்டி
திருகோணமலை மாவட்டத்தில் தூர இடங்களில் இருந்து வரும் மக்கள் பணவசதியின்றி காணப்படுகின்ற நிலையிலேயே சடலங்களை பிரேத பரிசோதனை
மேற்கொள்ளும் வரை குளிர்சாதன பெட்டி இல்லாமையினால் இவ்வாறு வெவ்வேறு வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்படுகின்றது.
இந்த நிலைமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருகோணமலை பொது வைத்தியசாலை
நிர்வாகத்தின் பதில் என்ன.
ஆழ்ந்த கவலையில் இருக்கின்ற நிலையில் உயிரிழந்த தனது உறவினர்களின் சடலங்களை
அவசரமாக பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற
நோக்குடன் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகின்ற உறவினர்களின் நிலை
இன்னும் கவலையை ஏற்படுத்தும் செயலாகவே காணப்படுகின்றது.
ஆகவே திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம் மத்திய அரசாங்கத்துடன் தொடர்பு
கொண்டு பிரேதங்களை பாதுகாப்பதற்காக வேண்டி பழுதடைந்து காணப்படுகின்ற
குளிர்சாதன பெட்டியை திருத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த காலங்களை விடவும் இந்த அரசாங்கம் மக்களுடைய நலன் விடயத்தில் தீவிரமாக
செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் காணப்படுகின்ற பிரேத
குளிரூட்டி பழுதடைந்து காணப்படுகின்ற நிலையில் ஏன் வைத்தியசாலை நிர்வாகம்
மௌனம் சாதிக்கின்றது என கேள்வி எழுப்பப்படுகின்றது.
