Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் புகைப்படம் எடுக்க சென்ற இரு மாணவிகளுக்கு நேர்ந்த கதி

தமிழர் பகுதியில் புகைப்படம் எடுக்க சென்ற இரு மாணவிகளுக்கு நேர்ந்த கதி

0

முல்லைத்தீவு, குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் புகைப்படம் எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில், இன்றையதினம் (01.06.2025) புகைப்படம் எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி விழுந்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் புகைப்படம் எடுப்பதற்காக இரு மாணவிகள் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும் பூதன்வயல் மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நடந்தது என்ன..

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாதெனில் புகைப்படம் எடுக்கும் நோக்குடன் கொட்டுக் கிணற்று பிள்ளையார் ஆலயத்தில் உள்ள கேணியில் மூன்று பெண் மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இருவர் கேணிக்குள் இறங்கி நெஞ்சளவு நீருக்குள் இருந்து கொள்ள மூன்றாவது மாணவி அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார். கேணியின் நீருக்குள் இருந்த படியில் இருந்தவர்கள் படியில் இருந்து தவறி நீருக்குள் விழுந்துள்ளனர்.

அவர்களை காப்பாற்றும் நோக்கில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த மாணவி நீருக்குள் இறங்கி அவர்களை காப்பாற்ற முயன்ற போதும் அவர்களை நீரில் இருந்து வெளியே கொண்டுவர முடியவில்லை.

கேணிப்படியில் இருந்து தவறி நீருக்குள் விழுந்தவர்களும் காப்பாற்ற முயன்ற மாணவியும் நீருக்குள் இருந்து வெளியே வரும் முயற்சியின் போது கேணியில் இருந்து நீரை வெறியேற்ற பயன்படும் துருசு கட்டிடத்தினை நோக்கி நகர்ந்துள்ளனர்.

புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த மாணவி துருசு கட்டிடத்தின் ஒரு பகுதியில் பிடித்து படியின் வழியில் மேலே ஏறி வந்துள்ளார்.

வந்தவர் அயலில் உள்ள வீட்டை நோக்கி உதவிக்கு வருமாறு கூவி அழைத்துள்ளார்.

காணொளி பதிவு

குமுழமுனை – தொட்டுக் கிணற்று பிள்ளையார் கோவில் கேணியில் இருபத்து மணி நேர கண்காணிப்புக்காக காணொளி ஓடியோ கமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கேணியில் நடைபெறும் நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அந்த காணொளி பதிவுகளின் மூலமே மேற்படி முன்று மாணவி தொடர்பான விடயங்களை அறிய முடிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேணியில் உள்ள அறிவித்தல் 

கேணியின் பிரதான வாசலில் உள்ள தூணில் கேணிக்கு வருவோர் நடந்து கொள்ள வேண்டிய அறிவுறுத்தல்களை குறிப்பிட்டு அறிவித்தல் ஒன்றை காட்சிக்காக ஆலய நிர்வாகத்தினர் வைத்துள்ளனர்.

அந்த அறிவித்தலில் கேணியில் ஆழம் எட்டு அடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

கேணியில் நீருக்குள் இறங்கும் போது இது தொடர்பில் கவனம் செலுத்தாதது அந்த மாணவர்கள் விட்ட தவறாக இருப்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

இந்த அனுபவத்தினை கருத்தில் கொண்டு அறிவித்தலை நன்றாக தென்படும் வண்ணம் காட்சிப்படுத்துவதோடு விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

மேலதிக தகவல்: ஊகி 

NO COMMENTS

Exit mobile version