யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி ஒருவர்
விபத்தில் சிக்கிய நிலையில் மரணமடைந்துள்ளார்.
கைதடி –
தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயரத்தினம் சுசீலா (வயது 57) என்ற பெண்ணே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண், கடந்த 13ஆம் திகதி சிறையில் உள்ள தனது கணவனுக்கு உணவு
கொடுப்பதற்காக கைதடி வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தார்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் அதே வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவரை மோதித்
தள்ளிவிட்டு தப்பிச் சென்றது.
பின்னர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, யாழில் மோட்டார்
சைக்கிள் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபப் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – அரசடி
வீதி பகுதியை சேர்ந்த லோ.உசேந்திரா (வயது 70) என்ற பெண்ணே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த பெண் தட்டாதரு சந்தியூடாக
அரசடி வீதிக்கு திரும்ப முயற்சித்துள்ளார். இதன்போது கே.கே.எஸ் வீதியால் வந்த
மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
